5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி

நம் அண்டை நாடான சீனா, தைவான் ஜலசந்தியில், நான்கு நாட்களுக்கு அறிவித்திருந்த போர் பயிற்சியை ஐந்தாவது நாளாக நேற்றும் நடத்தியது.
தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, தங்கள் நாட்டுடன் இணைக்க, நம் அண்டை நாடான சீனா முயற்சித்து வருகிறது. ஆனால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கிறது. சமீபத்தில், அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்தார்.
இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடந்த 4ம் தேதி முதல், 7ம் தேதி வரை, தைவான் ஜலசந்தியில் சீன ராணுவம் போர் பயிற்சி செய்வதாக அறிவித்து, ஏவுகணைகளை ஏவி தைவானை அச்சுறுத்தியது. இதற்கு, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், சீனா கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், தைவான் ஜலசந்தியில், ஐந்தாவது நாளாக சீன ராணுவத்தினர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலர் ஜான் கிர்பி, “அடுத்த வாரத்தில், தைவான் ஜலசந்தியில் எங்களுடைய போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்களை நிறுத்துவோம்,” என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, “தைவான் கடல் பகுதிக்கு போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்களை அனுப்பி, நெருக்கடியை துாண்ட வேண்டாம்,” என தெரிவித்துள்ளார்.