தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை

மாமல்லபுரத்தில் 11 நாட்கள் கோலாகலமாக நடந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் திருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகத்தின் வரவேற்பு, விருந்தோம்பல், அன்புக்கு நன்றி தெரிவித்து, வெளிநாட்டு வீரர்கள் பிரியாவிடை பெற்றனர்.

‘சர்வதேச செஸ் ஒலிம்பியாட் – 2022’ போட்டி, சென்னையில் கலை நிகழ்ச்சிகளுடன், ஜூலை 28ல் துவங்கியது. சர்வதேச செஸ் வீரர்களை, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் தமிழக அரசு வரவேற்று உற்சாகப்படுத்தியது. பிரதமர் மோடி போட்டியை துவக்கி வைத்தார். விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, மாமல்ல புரத்தில் உள்ள ‘போர் பாயின்ட்ஸ்’ விடுதியில், 29ல் போட்டி துவங்கியது. 184 நாடுகளின், 1,700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டிக்காக இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டன. முதல் அரங்கில், 49 போட்டிகள் நடத்தப்பட்டன. 196 பலகைகளில், 56 ஆண்கள், 42 பெண்கள் அணியினர் விளையாடினர். இரண்டாம் அரங்கில், 126 போட்டிகள் நடத்தப்பட்டன. 512 பலகைகளில், 66 ஆண்கள், 60 பெண்கள் அணியினர் விளையாடினர். தினமும் மாலை 3:00 மணிக்கு விளையாட துவங்கி, இரவு 8:30 மணி வரை நீடித்தது. முதல் சுற்றின் உற்சாக துவக்கம், அடுத்தடுத்த சுற்றுகளில் விறுவிறுப்பானது. நேற்றைய 11வது இறுதிச் சுற்றில், காலை 10:00 மணிக்கு போட்டிகள் துவங்கின. மாலை 3:30 மணிக்கு, போட்டிகள் முடிவுற்ற உடனே, ‘டிஜிட்டல்’ செஸ் பலகைகள் அகற்றப்பட்டன.

கடந்த 11 நாட்கள், சர்வதேச திருவிழா போல கோலாகலத்துடன் நடந்த இப்போட்டி, நேற்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக வீரர்கள், தங்களின் உடமைகளுடன் விடுதியில் இருந்து கிளம்பியபோது, விடுதி நிர்வாகிகளிடம், ‘தமிழகத்தின் விருந்தோம்பல் பண்பு மிகவும் கவர்ந்துள்ளது. எப்போதும் இந்திய நாட்டையும், அன்பு செலுத்திய மக்களையும், மாமல்லபுரத்தையும் மறக்கமாட்டோம்’ என, உணர்ச்சி பொங்க கட்டித்தழுவி, பிரியாவிடை பெற்றனர். தமிழக சுற்றுலாத் துறை, வீரர்களுக்கு நினைவு பரிசாக, சிறிய அளவில் கடற்கரை கோவில் பைபர் சிற்பம், திருக்குறள் ஆங்கில புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கியது.