தோட்டம் முழுவதும் 56 உடல் பாகங்கள், 5 எலும்புக்கூடு துண்டுகள் – பிபிசி தமிழ் கள நிலவரம்

கேரள மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட இரண்டு பெண்களை கடத்தி நரபலி கொடுத்த சம்பவத்தில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு பெண்கள் கொலை மட்டுமின்றி ஷாஃபி மேலும் பல கொலைகளை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எலந்தூர் மக்களிடையே நிலவுகிறது. அங்குள்ள கள நிலவரத்தை வழங்குகிறது பிபிசி தமிழ்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பகவல் சிங்கின் வீடருகே நாம் முதலில் சந்தித்த பெயர் வெளியிட விரும்பாத திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண்மணி தாமும் மாந்திரீகரான ஷாஃபியின் வலையில் சிக்கவிருந்ததாகவும் அதில் இருந்து கடைசியில் மீண்டதாகவும் கூறினார்.

“முதலில் ஷாஃபியின் வேண்டுகோளுக்கிணங்க சென்றிருக்க வேண்டியது நான் தான். என்னிடம் ஒரு லட்சம் ரூபாய் வரை தருவதாக அவர் சொன்னார். ஆனால், கடைசியில் மனம் மாறினேன். என்னால் வர முடியாது என்று சொல்லி விட்டேன். அதன் பிறகுதான் ரோஸிலினை ஷாஃபி அழைத்துச் சென்றார்,” என்று அந்த பெண்மணி தெரிவித்தார்.

நரபலி விவகாரத்தில் ஷாஃபி, இப்படி ஒரு கொடூர செயலை செய்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை என்கிறார் அவரது மனைவி.

நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் 61 உடல் பாகங்கள் பகவல் சிங் வீட்டிலுள்ள தோட்டத்தில் பல்வேறு இடங்களில் புதைக்கப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அவை கச்சிதமாக கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றில் 56 உடல் பாகங்கள் பத்மாவுடையது. 5 எலும்புக்கூடு துண்டுகள் ரோஸ்லினுடையது என தெரிய வந்துள்ளது. அவற்றில் நேற்று 35 பாகங்களும் எஞ்சிய 26 பாகங்கள் இன்றும் பிரேத பரிசோதனை மற்றும் அதைத்தொடர்ந்த ரசாயன ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

பத்மா, ரோஸ்லின் ஆகிய இரண்டு பெண்களின் உடல் பாகங்களும் ஒன்றுக்கொன்று கலந்திருப்பதால், தனித்தனியாக அவற்றைப் பிரித்தெடுக்க இருவருடைய ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.