அதிமுக, பாஜக உரசல் தமிழ்நாட்டில் கூட்டணிக் கணக்குகளை தலைகீழாகப் புரட்டிப் போடுமா?

அதிமுக – பாஜக உறவில் ஏற்பட்டுள்ள உரசல், விரிசலாகி நிரந்தரப் பிரிவாகுமா? அல்லது கடந்து செல்லும் மேகம்போல இந்த கசப்புணர்வு காலவோட்டத்தில் கரைந்து போய், பரஸ்பர தேவைகள் காரணமாக மீண்டும் ஒட்டிக்கொள்ளுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் சூடாக விவாதிக்கப்படும் பொருளாக இருக்கிறது.

ஏற்கெனவே, பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது வலுவான குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார். பெண் நிர்வாகியுடனான மோசமான உரையாடல் கசிவு வெளியான நிலையில், அந்தக் கட்சியின் ஓபிசி அணி மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து விலகினார். ஆனால் அவரைப் பாதுகாக்க முயன்றதாக அண்ணாமலை மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், அந்தக் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வு, முந்தைய நிகழ்வுகளைப் போல பாஜகவுக்குள் நிலவும் உள்கட்சி கொந்தளிப்பைக் காட்டுவதாக மட்டும் முடியவில்லை.

மாறாக, கூட்டணிக் கட்சியான பாஜக-வில் இருந்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியேறிய நிர்வாகியை ஏற்றுக்கொண்டதன் மூலம் பாஜகவுக்கும், அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி இரண்டு கட்சிகளும் உரசிக் கொள்ளவும் வழி ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம் திமுகவுடனான தங்கள் உறவு வலுவான கொள்கை உறவு என்பதையும், இந்திய அளவில் திமுக ஒரு கூட்டணியை முன்னெடுக்கவேண்டும் என்பதையும் சமீபத்திய கூட்டம் ஒன்றில் உரத்துச் சொல்லியிருக்கிறார் தொல்.திருமாவளவன். அதே நேரம், சில விஷயங்களை தொடுகோடு போல லேசாக ஆனால், தேவையான அழுத்தத்தோடு சொல்லியிருக்கிறார் அவர்.

பாஜகவில் இருந்து விலகிய சி.டி.ஆர் நிர்மல் குமார்- தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
5 மார்ச் 2023
“அண்ணாமலை ரகசியமாக பேசும் தமிழக அமைச்சர் யார்?” நிர்மல்குமார் குற்றச்சாட்டால் தகிக்கும் பாஜக, அதிமுக
8 மார்ச் 2023
அதிமுக – பாஜக கூட்டணி முறிகிறதா? “எதிர்விளைவு இருக்கும்” – எச்சரிக்கும் அண்ணாமலை
7 மார்ச் 2023
தமிழ்நாட்டில் போலீஸ் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும், ஆனால், அது பாஜகவின் திட்டங்களுக்கு ஏற்ப செயல்படுவதைப் போலத் தெரிகிறது என்ற ஒரு கருத்தை அவர் வெளியிட்டார். திமுக ஆட்சியில் இருக்கும்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் காரை பாஜகவினர் வழிமறிக்க முடிகிறது என்ற கவலையையும் அவர் வெளியிட்டார். அத்துடன், பாஜக – பாமக இருக்கும் இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது என்பதையும் அவர் புதிய அழுத்தத்தோடு சொல்லியிருக்கிறார்.

மறுநாளே, தமது பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்று சேர வேண்டிய தேவையை மிகவும் வலியுறுத்திக் கூறியதோடு, காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்று பேசப்படும் கருத்தையும் புறக்கணித்தார். பல வடமாநிலத் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், ஒரு வலுவான தேசிய அணியை உருவாக்குவதற்கான தேவையை வலியுறுத்தியது மட்டுமல்ல, அதற்கான நம்பிக்கையையும், ஊக்கத்தையும் விதைக்கும் வகையில் இருந்தது அந்தப் பேச்சு.