தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், தெலுங்கில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு ஆகியன, திரையுலகில் மிக உயரிய விருதான ஆஸ்கரை வென்றுள்ளன.

அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு கோலாகலமாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முணுமுணுக்க வைத்திருக்கிறது.

காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.