வடமாநில தொழிலாளர் பற்றிய பேச்சு: பிரசாந்த் கிஷோர் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் – நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசிய பேச்சு தொடர்பாக ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், வட மாநிலத் தொழிலாளர் குறித்த அவரது கருத்துகளுக்காக கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
வட தொழிலாளர்கள் தொடர்பான சீமான் பேச்சை பகிர்ந்து அது வெறுப்பை வளர்க்கும் இத்தகைய பேச்சு மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மார்ச் 10-ம் தேதி ஒரு ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் அருந்ததியர் குறித்து சீமான் பேசிய பேச்சு தொடர்பான வழக்கில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுவதாகவும் கொலை செய்யப்படுவதாகவும் சமூக ஊடகத்தில் பரவிய போலி காணொளிகள் வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தின.
இந்த போலி காணொளிகள் வைரலாக பரவியதைத் தொடர்ந்து பிகார் போன்ற மாநிலங்களின் அரசியலிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதை தொடர்ந்து பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் உண்மை சூழலை அறிந்துகொள்வதற்காக தமிழ்நாடு வந்தனர்.
இதனிடையே, இந்த வீடியோக்கள் போலியானவை என தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் அதனைப் பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தொழிலாளர்கள் அச்சத்தில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதாக செய்திகள் வெளிவரத் தொடங்கிய நிலையில், தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இதனை முற்றிலுமாக மறுத்துவிட்டன. மேலும், புரளி பரப்பியதாக சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
