சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசு விதிகளை மீறுகிறதா?

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் நடவடிக்கை விதிகளை மீறி நடப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, மீண்டும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டம். கோவை மாவட்டத்திற்கு பில்லூர், சிறுவாணி திட்டங்களிலிருந்து தண்ணீர் பெறப்படுகிறது.
சிறுவாணி திட்டத்திலிருந்து பெறப்படும் தண்ணிர் குடிநீர் தேவைக்காக பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அதே போல் பில்லூர் திட்டத்திலிருந்து பெறப்படும் தண்ணீர் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

கேரளாவில் முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. பின்னர் அங்கிருந்து பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து அத்திக்கடவு மற்றும் பவானி சாகர் அணை வரை இந்த நீர் தான் செல்கிறது.
இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிற இந்த தடுப்பணையால் பில்லூர் அணைக்கு வருகின்ற நீர் வரத்து குறையும் அபாயம் உள்ளது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சிறுவாணி தொடர்பாக புத்தகம் எழுதியுள்ள கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் சி.ஆர்.இளங்கோவன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “கோவையில் முதல் குடிநீர் திட்டமான சிறுவாணி முதன் முதலில் 1899 ஆம் மொழியப்பட்டு 40 ஆண்டுகள் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 1929-ம் ஆண்டு செயல்பாடிற்கு வந்தது. இந்தியாவிலேயே ஒரு நகராட்சியால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முதல் குடிநீர் திட்டம் சிறுவாணி தான். அப்போது மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்படவில்லை. ஒன்றுபட்ட கோவையில் தான் சிறுவாணி இருந்தது,” என்கிறார்.