மோதி அரசின் ஒன்பது ஆண்டுகள்: சாதனைகளை பட்டியலிடும் பாஜக, தோல்விகள் என சுட்டிக்காட்டும் காங்கிரஸ்!
பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று விரைவில் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதையொட்டி மத்திய அரசின் சாதனைகளை பாஜக பெருமையுடன் பேசி வர, எதிர்க்கட்சிகள் அதை விமர்சித்துள்ளன.
கடந்த 2014 இல் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது. இதை முன்னிட்டு, மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகள் பட்டியலை சமூக ஊடகங்களில் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தது பாஜக.
பாஜகவின் இந்த பதிவை மெளனமாக கடந்து போகாத காங்கிரஸ், பாஜகவிடம் ஒன்பது கேள்விகளை முன்வைத்துள்ளது. மத்திய பாஜக அரசு மீதான தங்களது கேள்விகளை சமூக ஊடகங்களில் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 28 நகரங்களில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலும் காங்கிரஸ் எழுப்பி உள்ளது.
‘நாட்டு மக்களின் குரலாக இதுபோன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படும் என்றும், மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி கொண்டே இருப்போம்’ எனவும் காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
