என்.டி.ராமராவின் அரசியல் வேர்களை சாமர்த்தியமாக வெட்டிய மருமகன் சந்திரபாபு நாயுடு
என்டிஆரின் பழக்கவழக்கங்கள் சற்று வித்தியாசமானவை. உலகம் கண்விழிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே அவர் படுக்கையை விட்டு எழுந்து சூரியன் உதிக்கும் முன் வயிறார உணவை உட்கொள்வார்.
என்.டி.ஆரை நன்கு கவனித்து பணிவிடை செய்வதற்காக அவர் எழுவதற்கு முன்பே அவருடைய மனைவி எழுந்துவிடுவார். 1984 இல் அவர் புற்றுநோயால் இறக்கும் வரை இந்த செயல்முறை தொடர்ந்தது.
என்டிஆர் தனிமையை விரும்பும் நபர், அவருக்கு தனிப்பட்ட நண்பர்கள் மிகக் குறைவு. அவரைச் சந்தித்தவர்களில் பெரும்பாலானவர்கள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட எழுத்தாளர்கள், அவர்களுடன் அவருக்கு வணிக உறவு மட்டுமே இருந்தது.
அவருக்கு ஏழு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் இருந்தனர். ஆனால் அவர்அவர்களுடன் நேரத்தை செலவிடுவது மிகஅரிது.
“ஒருமுறை நான் என் தந்தையை சந்திக்க என் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். இவன் என்னுடைய இளைய மகன், இன்டர்மீடியட் படிக்கிறான் என்று என் தந்தை அங்கிருந்தவர்களிடம் என்னை அறிமுகம் செய்தார். ஆனால் அது சரியல்ல. முதலாவது, நான் அவருடைய இளைய மகன் இல்லை, இரண்டாவதாக, நான் இன்னும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன், இன்டர்மீடியட் அல்ல,” என்று அவரது மகன் பாலகிருஷ்ணா ஒருமுறை கூறினார்.
அவரது பதினொரு குழந்தைகளில், யார் மூத்தவர், யார் இளையவர் அல்லது எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்பது கூட என்டிஆருக்கு தெரியாது என்பது இதிலிருந்து தெரிகிறது. அவர் தனது சொந்த உலகத்தில் தொலைந்துபோயிருந்தார்.
“ஒருமுறை என்.டி.ஆர். தனது பேத்தியின் திருமணத்தில் கலந்து கொள்ள செகந்திராபாத் வந்திருந்தார். ஹாலில் தனியாக அமர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினர் அவரை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்கள்,” என்று ‘தி இந்து’ நாளிதழின் செய்தியாளர் ராஜேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.
