ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாடு தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாவதன் பின்னணி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்துகொண்ட மாநாடு நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று ஒரு நாள் நடைபெற்றது.
உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பது என்கிற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த்ராவ் பாடில், பல்கலைக்கழக மானிய குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பிற மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மாநில அரசு சார்பில் யாரும் கலந்து கொண்டிருக்கவில்லை.
கடந்த ஆண்டு இதே போல் நீலகிரியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக துணை வேந்தர்களை அழைத்து நடத்திய மாநாடு விவாதப் பொருளானது.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே அதிக விவாதங்களை எழுப்பிய விஷயங்களுள் உயர்கல்வித் துறையும் ஒன்று.
பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரை வேந்தராக மாற்றும் சட்ட மசோதா ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. மாநில கல்விக் கொள்கை வகுக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து வலியுறுத்திப் பேசி வருகிறார்.
