பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, ஒரே நாடு ஒரே தேர்தல் வரிசையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நீண்ட காலமாக முன் வைக்கும் ஒன்று பொது சிவில் சட்டம்.
2014-ம் ஆண்டு மோதி தலைமையில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் குறித்த குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.
அதன் விளைவாக, 21-வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து ஆய்வு செய்தது. 2016-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பொது சிவில்
சட்டம் குறித்த கேள்விகளை முன்வைத்து, அதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கருத்துகளையும் அது கோரியிருந்தது. அதேபோன்ற பொதுக் கருத்து கோரும் அறிவிக்கைகள் 2018-ம் ஆண்டு மார்ச் 19, மார்ச் 27, ஏப்ரல் 10 ஆகிய தேதிகளிலும் வெளியிடப்பட்டன.
அவ்வாறு பெறப்பட்ட பதில்கள் அடிப்படையில் 21-ம் சட்ட ஆணையம் “குடும்ப சட்டங்களின் சீர்திருத்தம்” என்ற தலைப்பில் அதே ஆண்டு மார்ச் 31-ம் தேதி ஆலோசனைக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அந்த கட்டுரை வெளியாகி 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், பொது சிவில் சட்டத்தின் முக்கியத்துவம் கருதியும், அதன் பின்னர் வெளிவந்த பல நீதிமன்ற உத்தரவுகளை கருத்தில் கொண்டும் 22-வது இந்திய சட்ட ஆணையம் அந்த விஷயத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.
பொது சிவில் சட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்க முடிவு செய்து, ஜூன் 14-ம் தேதியன்று அறிவிப்பு ஒன்றை 22வது இந்திய சட்ட ஆணையம் வெளியிட்டுள்ளது.
பொது மக்களும், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளும் பொது சிவில் சட்டம் தொடர்பான தங்களது கருத்துகள், ஆலோசனைகளை 30 நாட்களுக்குள் இமெயில் மூலம் இந்திய சட்ட ஆணையத்திடம் தெரிவிக்கலாம்.
