பூமி சுழலும் அச்சு 80 செ.மீ. கிழக்கில் நகர இந்தியர்களும் ஒரு காரணம் – எப்படி தெரியுமா?
பூமி சுழலும் அச்சு, 1993 ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 80 செ.மீ. கிழக்கு நோக்கி நகர்ந்திருக்கிறது.
இதுபற்றிய விவரங்கள் அமெரிக்கப் புவி இயற்பியல் சங்கத்தின் சஞ்சிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிலத்தடி நீரை மனிதர்கள் அதிகமாக உறிஞ்சி எடுப்பது கடலின் மட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக அந்த ஆய்வு கூறியிருக்கிறது.
இதற்கு ஒருவகையில் இந்தியர்களும் காரணமா?
நிலத்தடியிலிருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர், காற்றில் ஆவியாகிறது, அல்லது ஆறுகளில் சென்று கலக்கிறது. “ஆவி நீராகியோ, அல்லது ஆறுகளில் கலந்த நீரோ, இறுதியில் கடலில்தான் சென்று கலக்கிறது,” என்கிறார் தென்கிரொயாவின் சோல் தெசியப் பல்கலைகழகத்தின் புவி அறிவியல் பேராசிரியரான கி-வெயான் சோ. இவர்தான் இந்த அறிக்கையின் தலைமை ஆய்வாளர்.
இதன் மூலம், நீர் “நிலத்தடியிலிருந்து கடல்களுக்கு இடம்பெயர்கிறது,” என்கிறார்.
பூமியின் சுழற்சியில் நீரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று 2016ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2021ல், மற்றொரு ஆய்வு, பூமி அச்சின் சாய்கோணத்தினால், துருவங்களில் இருக்கும் பனி உருகி கடல்களில் கலப்பதைப்பற்றி ஆராய்ந்தது.
ஆனால், இதுநாள்வரை, நிலத்தடி நீர் எப்படி பூமி சுழல்வதை மாற்றும் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
