ஓ.பி.எஸ் தனக்கு உதவாத பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிச் செல்ல முடிவெடுத்து விட்டாரா?
அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் கைகோர்த்திருப்பதோடு தனக்கு உதவாத பா.ஜ.கவை விட்டு விலக முடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது. இது நாடாளுமன்றத் தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கான முயற்சியில் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறார் ஓ. பன்னீர்செல்வம்.
இருந்தபோதும், பா.ஜ.க.வின் ஆதரவை வெகுவாக அவர் தரப்பு நம்பியிருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களில் அதிலும் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் சூழலில், ஓ.பி.எஸ், டிடிவி இருவரும் இன்னும் தீவிரமாக இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதெல்லாம், பா.ஜ.கவுடன் கூட்டணி தொடர்வதாகவே தொடர்ந்து சொல்லி வருவார். அது தொடர்பாக செய்தியாளர்கள் எந்தவிதமாகக் கேள்வியெழுப்பினாலும் மாறுபட்ட பதிலை அளிக்கமாட்டார்.
ஆனால், இப்போது நிலைமை வேறு மாதிரியாக உள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலின்போதுகூட, தானே வலிய பா.ஜ.க.வின் மாநில தலைமையகத்திற்குச் சென்று ஆதரவு கொடுத்தார் ஓ. பன்னீர்செல்வம்.
நீண்ட காலமாகவே எடப்பாடி கே. பழனிச்சாமி – ஓ. பன்னீர்செல்வம் இரு தரப்பினரையும் ஒன்றாகவே நடத்தி வந்த பா.ஜ.க. தலைமை, ஒரு கட்டத்திற்குப் பிறகு முழுமையாக எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பின் பக்கம் சாய்ந்துவிட்டது.
ஜூலை 18ஆம் தேதி டெல்லியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடந்தபோது, எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் எல்லாவற்றுக்கும் உச்சமாக அமைந்தது.
இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட இடம் வழங்கப்படாத சின்னச் சின்ன கட்சிகள்கூட இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டன. ஆனால், அ.தி.மு.க.வின் சார்பில் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதோடு, அவர் பிரதமர் மோதியின் அருகிலும் அமர வைக்கப்பட்டார்.
