ஜெயலலிதா சேலை கிழிப்பா? சட்டமன்ற நிகழ்வுகளை நேரில் கண்ட பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன?
கடந்த சில நாட்களாக 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி வருகிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதில் தொடங்கிய இந்தப் பரபரப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. 1989ஆம் ஆண்டின்போது, சட்டமன்றத்தில் உண்மையில் என்ன நடந்தது? ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டாரா?
பிரதமர் நரேந்திர மோதி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘சட்டமன்றத்திலே ஜெயலலிதாவின் சேலையை திமுகவினர் பிடித்து இழுத்தனர்` எனப் பேசினார்.
நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சும் அதற்கு அரசியல் கட்சிகள் ஆற்றும் எதிர்வினைகளும் தமிழ்நாடு அரசியலில் தற்போது பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோதி தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தில் மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, “மகாபாரதம் குறித்தும் திரௌபதி குறித்தும் கனிமொழி பேசியிருந்தார். 25 மார்ச், 1989இல் நடந்த ஒரு சம்பவம் குறித்து இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைத்தே எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டது. அங்கிருந்த திமுக உறுப்பினர்கள் ஜெயலலிதாவை பார்த்து பண்பற்ற விமர்சனத்தை வைத்தனர், அவரைப் பார்த்து சிரித்தனர்,” என்று தெரிவித்திருந்தார்.
இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்மலா சீதாராமனின் விமர்சனத்துக்கு பதில் அளித்திருந்தார்.
