பிரதமர் நரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: வெறும் தேர்தல் பிரசாரமா?
இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தையொட்டி , பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து தனது உரையை நிகழ்த்தினார். அவர் பிரதமராகி பத்தாவது முறையாக சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நிகழ்த்தும் கடைசி உரை இதுவென்பதால், தேர்தல் பிரசாரத்துக்கான உரையாகவே இது அமைந்துள்ளது.
மணிப்பூர் கலவரம் உச்சத்தில் இருந்த போது கூட பிரதமர் வாய் திறந்து பேசவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக பிரதமரை சாடின. நாடாளுமன்ற அவைகள் இந்த விவகாரம் காரணமாக முடங்கின. நாடாளுமன்றத்தில் பேசிய முதல்வர், ஒன்றரை மணி நேரமாக பேசியும் மணிப்பூர் குறித்து உடனே பேசவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது பத்தாவது சுதந்திர தின உரையில், மணிப்பூர் வன்முறை குறித்து பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி. “கடந்த சில வாரங்களாக, வட கிழக்கில் மணிப்பூரிலும் மற்றும் சில பகுதிகளிலும் வன்முறை வெடித்து பலர் உயிரிழந்துள்ளனர். மகள்கள் மற்றும் தாய்மார்களின் கண்ணியம் மீறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக, அங்கே அமைதி திரும்பி கொண்டிருப்பதற்கான செய்திகளை கேட்டு வருகிறோம். ஒட்டு மொத்த நாடும் மணிப்பூருடன் நிற்கிறது. அமைதியின் மூலமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும். மத்திய மாநில அரசுகள், ஒன்றாக இணைந்து தீர்வுகளை கண்டறிய பணியாற்றி வருகிறோம்” என பேசி, தன் மீதான விமர்சனங்களை களைய முயன்றுள்ளார்.
பிரதமர் மோதி 2017ம் ஆண்டு, தனது சுதந்திர தின உரையில், நாட்டின் வளர்ச்சி சீராக இல்லை, இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வேகமான வளார்ச்சி வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக சகோதர சகோதரிகளே என்று மக்களை அழைக்கும் அவர், இன்று தனது உரையில், குடும்ப உறுப்பினர்களே என்று அழைத்தார். தனது ஒன்பது ஆண்டு கால ஆட்சியின் முக்கிய சாதனைகளை எடுத்து உரைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற உறுதியை வெளிப்படுத்தினார். அவரது இத்தனை ஆண்டு கால ஆட்சியில், இந்தியாவை ‘விஸ்வ மித்ரா’ உலகின் நண்பனாக மாற்றியதாக அவர் தெரிவித்தார்.
இந்தியா தற்போது மூன்று விசயங்களுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. அவை- ஊழல், குடும்ப அரசியல், சமரச அரசியல் என மோதி தெரிவித்துள்ளார். இவை அனைத்துமே காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை சாடி பேசப்பட்டவையாகவே இருக்கின்றன.
குடும்ப அரசியல் என்பது காங்கிரஸ் மீது தொடர்ந்து பாஜக வைக்கும் விமர்சனமாகும். பிரதமர் தனது உரையில், காங்கிரஸ் கட்சியையோ, அல்லது வேறு கட்சிகளையோ பெயர் சொல்லி குறிப்பிடா விட்டாலும் அவரது தாக்குதல் யாரை நோக்கி என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது.
ஊழலுக்கு எதிராகவும் குடும்ப அரசியலுக்கு எதிராகவும் தான் தொடர்ந்து போராடி வருவதாக தெரிவித்தார். “இவை மக்களின் கனவுகளுக்கு தடைகளாக உள்ளன. இந்தியாவின் திறனை ஊழல் மிக கடுமையாக பாதித்துள்ளது. ஊழலை எதிர்த்து போராடுவது மோடியின் வாழ்நாள் உறுதியாகும். சமரச அரசியல் , சமூக நீதியின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழலை எந்த விதத்திலும் சகித்துக் கொள்ள முடியாது என நாடு உறுதியேற்க வேண்டும். நாட்டின் ஜனநாயகம் வாரிசு அரசியல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள் ‘குடும்பத்தின் கட்சி, குடும்பத்தினால் கட்சி, குடும்பத்துக்காக கட்சி’ என்ற மந்திரத்துடன் செயல்படுகின்றனர்.
