பிகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டு விட்டதாக பிரதமர் கூறியது உண்மையா? கள நிலவரம் என்ன?
நாட்டின் பல்வேறு இடங்களில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் அதாவது ‘எய்ம்ஸ் மருத்துவமனைகள்’ திறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி கடந்த வாரம் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோதி பேசியபோது, “அசாமின் கௌஹாத்தி முதல் மேற்கு வங்க மாநிலம் கல்யாணி வரையிலும், ஜார்கண்டில் உள்ள தியோகர் முதல் பிகாரில் உள்ள தர்பங்கா வரையிலும் சிறந்த சுகாதார வசதிகளுடன், மக்கள் சிகிச்சை பெறும் வகையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் செல்ல வேண்டியதில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான அரசியல் சூடுபிடித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரதமர் மோதி தவறான தகவலை கூறியிருப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “பிரதமரிடம் இருந்து நாடு உண்மையை எதிர்பார்க்கின்றது, ஆனால் அவர் பொய் சொல்கிறார்,” என்று ட்வீட் செய்துள்ளார்.
