என்சிஇஆர்டி பாடநூல்களுக்கு சவால் விடும் கேரளா – துணைப் பாடநூல்களை அறிமுகப்படுத்தி பதிலடி
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (NCERT) 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கற்பதற்காக வழங்கும் பாடநூல்களில் மனிதநேயம் குறித்து அளிக்கப்பட்டுள்ள தவறான தகவல்களைச் சரிசெய்யும் விதத்தில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கேரளா துணைப் பாடநூல்களை வழங்கவுள்ளது.
தற்காலத் தேவைகளுக்குப் பொருந்தாது என்ற காரணத்தைக் கூறி என்சிஇஆர்டி நீக்கியுள்ள அனைத்துப் பாடங்களையும் இந்த துணைப் பாடநூல்களில் கேரள அரசு அளித்துள்ளது. அவற்றை வரும் 23ஆம் தேதியன்று அறிமுகம் செய்து இந்தக் கல்வி ஆண்டிலேயே மாணவர்கள் அந்தப் பாடநூல்களைப் பயன்படுத்த வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது.
“வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம், சமூக அறிவியல் போன்ற பாடநூல்களில் முக்கிய பகுதிகளை என்சிஇஆர்டி நீக்கம் செய்துள்ளதை கல்வியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் கேரளா கூடுதலாக துணைப் பாடநூல்களை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் தேசிய முக்கியத்துவத்தையும், கல்வி அறிவின் தேவைக்கான முக்கியத்துவத்தையும் முதலில் மாணவர்களிடையே போதிக்க விரும்புகிறது,” என்கிறார் பிபிசியுடன் பேசிய கேரள மாநில கல்வி அமைச்சர் வீ. சிவன்குட்டி.
குறிப்பாகச் சொல்லப்போனால், 2005 முதல் என்சிஇஆர்டியின் பாடத்திட்டங்களில் இடம்பெற்றிருந்த பாடங்களில் சிலவற்றை மீண்டும் கேரள அரசு அறிமுகப்படுத்துகிறது.
