காம்பியா: இந்திய இருமல் மருந்துகளால் 19 குழந்தைகள் உயிரிழப்பா? உண்மை என்ன?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எப்ரிமா சஜ்னியா தனது 3 வயது மகன் கண்முன்னே மெல்ல மெல்ல இறந்ததை தவிப்புடன் பார்ப்பதை தவிர வேறு வழியில்லாமல் தவித்தார்.
காம்பியாவில் வாடகைக் கார் ஓட்டிவரும் சஜ்னியா, தனது மகன் லாமினுக்கு காய்ச்சல் வந்ததற்கு சில வாரங்கள் முன்பாகத் தான், அவன் மழலையர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதாகத் தெரிவிக்கிறார். குழந்தைக்குக் காய்ச்சல் வந்த போது உள்ளூர் மருத்துவர் ஒருவர் சில மருந்துகளை எழுதித் தந்தார். அதில் இருமல் மருந்தும் இருந்தது. ஆனால், குழந்தை இருமல் மருந்தை உட்கொள்ள மறுத்துவிட்டது.
“பலவந்தப்படுத்தி எனது மகனை இருமல் மருந்தை குடிக்கவைத்தேன்,” என்கிறார் காம்பியா தலைநகரான பன்ஜு நகரில் உள்ள தனது வீட்டில் அமர்ந்திருக்கும் சஜ்னியா.
அதற்கடுத்த சில நாட்களில் லாமினின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. சாப்பிடுவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் கூட லாமின் மிகவும் சிரமப்பட்டான். இதைத் தொடர்ந்து குழந்தையை அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு சஜ்னியா எடுத்துச் சென்றார்.
ஆனால் லாமினின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகம் பழுதடைந்திருந்ததைக் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லாமின், தொடர்ந்து உடல் நிலை மோசமாகி அடுத்த 7 நாட்களுக்குள் உயிரிழந்தான்.
காம்பியாவில் கடந்த ஆண்டு ஜுலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே இதே போல் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட 5 வயதுக்கும் குறைவான 70 குழந்தைகளின் மரணங்களில் ஒன்று தான் லாமினின் மரணம். இந்த குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்த மெய்டன் ஃபார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகளில் ஏதாவது ஒன்றைக் எடுத்துக்கொண்டவர்களாக இருந்தனர்.
