இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்துவரும் சீன கடற்படையின் ஆதிக்கமும் செயல்பாடுகளும் இந்திய அரசுக்கும் பாதுகாப்பு நிபுணர்களுக்கும் கவலைக்குரியதாகவும் விவாதத்துக்கு உரியதாகவும் உள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த ராணுவ மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா – சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இது இன்னும் ஆழமடைந்துள்ளது.
இரு நாடுகளும் இந்திய பெங்கடல் பகுதியிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புவதால் இந்த பகுதியில் பதற்றம் நிலவுவதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, சீனா தனது கடற்படையை நவீனமயமாக்கியுள்ளது. ஏராளமான விமான தாங்கிகள், போர்க்கப்பல்கள் மற்றும் ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை அந்நாட்டு கடற்படை கொண்டுள்ளது.
சமீபத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் குறித்து பேசும்போது, “கடந்த 20-25 ஆண்டுகளாக, இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படையின் இருப்பு மற்றும் செயல்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீன கடற்படையின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, உங்கள் சுற்றுப்புறத்தில் இவ்வளவு பெரிய கடற்படை இருக்கும் போது, அதன் செயல்பாடுகள் உங்கள் பக்கத்தில் அவ்வப்போது தெரியும்.” என குறிப்பிட்டார்.
சீன துறைமுக நடவடிக்கைகளை குறிப்பிடும்போது, குவாதர் மற்றும் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும் பேசிய ஜெய்சங்கர், இந்தியாவின் முந்தைய அரசுகள் மீதும் விமர்சனத்தை வைத்தார்.
“இதன் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் இந்த துறைமுகங்கள் எவ்வாறு செயல்படும் என்பதையும் அன்றைய அரசாங்கங்கள், கொள்கை வகுப்பாளர்கள் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். எனவே, அவை நம் நாட்டின் பாதுகாப்பில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் இப்போது உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். ” என்றார்.
இந்தியக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது , முன்பை விட மிகப் பெரிய அளவில் இருக்கும் சீனாவின் இருப்புக்கு ஏற்ப இந்தியா தயாராவது சரியாக இருக்கும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
