இலங்கையில் அமைச்சரின் எம்.பி. பதவி பறிப்பு ஏன்? என்ன நடந்தது?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் சுற்றாடல்துறை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது.

ஹாபிஸ் நசீர் அஹமட், உட்பட முஸ்லிம் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சியின் தீர்மானத்தை மீறி, இலங்கை அரசாங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதனையடுத்து, அவர்கள் மூவரும் கட்சியில் வகிக்கும் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக – முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்ததோடு, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் அவர்களிடம் விளக்கமும் கோரியிருந்தது.

இதனையடுத்து ஹாபிஸ் நசீர் தவிர்த்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், மக்களின் நலன் கருதி வரவு – செலவுத் திட்டத்துக்கு தாம் ஆதரவளித்ததாக கட்சிக்குத் தெரியப்படுத்தியதோடு, தமது செயற்பாட்டுக்காக மன்னிப்பும் கோரினர் என, அந்தக் கட்சியின் செயலாளர் மூத்த சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கூறுகின்றார்.

ஆனால், ஹாபிஸ் நசீர் – உரிய விளக்கத்தை வழங்கத் தவறியிருந்தார். எனவே, அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக, கடந்த 2023 ஏப்ரல் 22ஆம் திகதி, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் நிலை ஏற்பட்டது.

நபரொருவர் எந்தக் கட்சியினூடாக அல்லது சுயேச்சைக் குழுவின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானாரோ, அந்தக் கட்சியில் அல்லது சுயேச்சைக் குழுவில் அவரின் அங்கத்துவத்தை இழந்தால், அந்த தினத்திலிருந்து ஒரு மாதத்தின் பின்னர் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் இல்லாமல் போகும் என அரசியலமைப்பின் பிரிவு 99(13)(அ) கூறுகின்றது.

எனவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தான் நீக்கப்பட்டமையானது சட்டப்படி செல்லுபடியாகாது என அறிவிக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றில் வழக்கொன்றை ஹாபிஸ் நசீர் அஹமட் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையிலிருந்து ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை – சட்டப்படி செல்லுபடியாகும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்த ஹாபிஸ் நசீர் அஹமட்டின் – நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோயுள்ளது.