வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய வரலாற்று திரிபுகளும் உண்மைகளும்

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என அழைக்கப்படும் 1857 சிப்பாய் கலகத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர்களில் முதன்மையானவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த மாலிக்கபூர், 612 யானைகளையும், 20,000 குதிரைகளையும், 96000 மணங்கு பொன்னும், முத்தும், அணிகலன்களும் அடங்கிய பெட்டிகளையும் மதுரையிலிருந்து கொள்ளையடித்து சென்றார் என்று வரலாறு கூறுகிறது.
“அப்படிப்பட்ட மாலிக்கபூரைக் கூட “கொள்ளைக்காரன் மாலிக்கபூர்” என யாரும் எழுதுவதில்லை, ஆனால் வெள்ளையர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி, ஆங்கிலேயர்கள் நடத்திய இறுதி விசாரணையில் கூட எவ்வித கொள்ளைக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத, வீரபாண்டிய கட்டபொம்மனை “கொள்ளைக்காரன்” என்று பழி சுமத்துகிறார்கள்”, என வேதனைப்படுகிறார் எழுத்தாளர் வே. மாணிக்கம்.

தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி எனும் ஒரு சிறிய பாளையத்தை ஆண்ட பாளையக்காரர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன், ஆனால் இந்த சிறிய பாளையத்தை பல கட்ட போர்களுக்கு பிறகு தான் ஆங்கிலேய அரசால் முழுமையாக கைப்பற்ற முடிந்தது. ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு,அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
“ஆங்கிலேய அரசுக்கு வரி கட்ட மறுத்தது, தனது படைவீரர்கள் உதவியோடு ஆங்கிலேய அரசுக்கு எதிராக புரட்சி செய்து பல ஆங்கிலேய சிப்பாய்களை கொன்றது, மற்ற பாளையக்காரர்களையும் அரசுக்கு எதிராக புரட்சி செய்ய தூண்டியது உட்பட பல காரணங்களுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் கயத்தாரின் பழைய கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் மேஜர் பானர்மேன் மற்றும் பாளையக்காரர்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்”, என 1881-இல் மதராஸ் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட, ராபர்ட் கால்டுவெல் எழுதிய ‘திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் கூட வீரபாண்டிய கட்டபொம்மன் சுதந்திரத்திற்காக போராடியவர் அல்ல, அவர் ஒரு கொள்ளைக்காரர் என சிலர் சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இதைக் குறித்து அவ்வப்போது சர்ச்சைகளும் எழுவதும் உண்டு. இது குறித்து சில நூல்களும் தமிழில் வெளிவந்துள்ளன.

இவ்வாறு சொல்லப்படுவதன் பின்னணி என்ன, வீரபாண்டிய கட்டபொம்மன் என்பவர் உண்மையில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியதால் தான் தூக்கிலிடப்பட்டாரா என தெரிந்து கொள்ள நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் வே. மாணிக்கத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.