இந்தியாவை புறக்கணித்து சீனா பக்கம் சாய்கிறதா பூடான்? இந்தியாவுக்கு என்ன பிரச்னை?
பூடான் வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயும் பல வருடங்களாக இருந்துவரும் எல்லைப் பிரச்னை முடிவுக்கு வரலாம் என ஊகங்கள் எழுந்து வருகின்றன.
மேலும், சீனவுக்கும் பூடானிற்கும் இடையே விரைவில் தூதரக உறவுகள் (Diplomatic Relations) ஏற்படுவதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. இந்த இரண்டு விஷயங்களும் இந்தியாவிற்கு மேலும் தலைவலியைதான் தரப்போகின்றன.
சீனாவிற்கும் பூடானிற்கும் இடையேயான எல்லைப் பிரச்சனையில் சமரசம் ஏதும் ஏற்பட்டால் அது நேரடியாக டோக்லாம் எல்லையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
2017ம் ஆண்டு இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே 73 நாட்களுக்கு மோதல் நிலவியது. பூடானால் தங்களது பகுதி என சொல்லப்படும் இடத்தில் சீனா சாலை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் இந்த மோதல் ஏற்பட்டது.
தற்போது பூடான் உடனான எல்லை பிரச்சனையில் சீனா தீர்வை எட்டிவிட்டால் இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்துடனும் சீனா நட்புறவில் உள்ளது என்ற சூழல் உருவாகிவிடும்.
சமீபத்தில், சீனா தனது அண்டை நாடுகள் தொடர்பாக வெளியுறவு கொள்கை குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், 12 அண்டை நாடுகளோடு தனக்கிருந்த தரை வழி எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொண்டதாக சீனா தெரிவித்தது. மேலும், 9 நாடுகளோடு நட்புறவில் இருப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திட்டுள்ளதாக சீனா தெரிவித்தது.
அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை.
