இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: எந்த நாடு யார் பக்கம் உள்ளது?
இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான மோதலால் சர்வதேச சமூகம் பல தசாப்தங்களாக பிளவுபட்டுள்ளது.
ஆனால் கடந்த மாதம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்த பிளவு முன்னெப்போதையும் விட மிக அதிகமாகவும் தெளிவாகவும் உள்ளது.
ஹமாஸ் தாக்குதல் நடந்த உடனேயே சில நாடுகள் ஹமாஸை கண்டித்து இஸ்ரேலை ஆதரித்த நிலையில், சில நாடுகள் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக களமிறங்கின.
சில நாடுகள் அமைதியை நிலைநாட்ட புதிய முயற்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தன. சில நாடுகள் இந்த போருக்கு இஸ்ரேலை குற்றம் சாட்டின.
ஆனால் இப்போது மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அரபு நாடுகள் ஹமாஸுக்கு ஆதரவாகவும் அணி திரள்வதைக் காணமுடிகிறது.
ராஜதந்திர உறவுகளைப் பேணிக் கொண்டே இஸ்ரேலுக்குத் தூதர்களை அனுப்பிய அரபு நாடுகளிடையே கூட அமைதியின்மை அதிகரித்து வருகிறது. உலகின் பல நாடுகள் இஸ்ரேலில் இருந்து தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துள்ளன.
இஸ்ரேலுடனான வர்த்தகத்தை நிறுத்துமாறு அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் இரான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மறுபுறம் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் இஸ்ரேலுடன் நின்று இந்தப் போரில் உதவுகின்றன.
போர் தொடங்கி ஒருமாதம் ஆகப் போகிறது. போர் எப்போது முடிவடையும்? ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்? காஸாவில் வாழும் மக்களின் வாழ்க்கை எப்போது திரும்பும் என்பதற்கு தற்போது யாரிடமும் பதில் இல்லை.
முதலில் இஸ்ரேலுடன் நிற்கும் நாடுகளைப் பற்றிப் பேசுவோம். அக்டோபர் 26 அன்று, ஐநா சபையில் ‘பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் காஸாவில் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்வதற்கு’ ஆதரவாக ஒரு போர்நிறுத்த தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது .
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும், அமெரிக்கா உட்பட 14 மேற்கத்திய நாடுகள் எதிராகவும், இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமலும் இருந்தன.
