ஆதாரை பயன்படுத்தி நம் வங்கிக் கணக்கில் பணத்தை எவ்வாறு எடுக்கிறார்கள்? தடுப்பது எப்படி?
மிக மெதுவாகவும் சீராகவும் இந்தியாவில் ஆதாரால் இயக்கப்படும் கட்டண முறையை (AePS) பயன்படுத்தி இணைய மோசடி வழக்குகள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக இதனால் A, B மற்றும் C வகை நகரங்களைச் சேர்ந்த மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கிறார்கள்.
பெங்களூருவில் மட்டும் சமீபத்தில் 116 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆந்திராவின் கடப்பா, தெலுங்கானாவின் ஹைதராபாத், பீகாரில் நவாடா, ராஜஸ்தானின் பாரத்பூர் ஆகிய நகரங்களில் இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தவிர, ஹரியானா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் மகாராஷ்ட்ரா, குஜராத், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் இந்த வழக்குகளின் பட்டியல் நீளமாக உள்ளது.
தற்போது இந்தியர்களின் முதன்மை அடையாள அட்டையாக உள்ள ஆதார் அட்டை மக்களை ஏமாற்றும் மோசடியாளர்களின் முதன்மையான கருவியாக தற்போது மாறியுள்ளது. முதலில், ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன், பெங்களூருவின் சமீபத்திய உதாரணத்தைப் பார்ப்போம்.
பெங்களூரு வழக்கில், பீகாரைச் சேர்ந்த முகமது பர்வேஸ் எஸ்தானி மற்றும் அபுசார் ஷமிம் அக்தர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஓ.டி.பி.யோ அல்லது குறுஞ்செய்தியோ இல்லாமலேயே இந்த மோசடிகளை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.
ஆனாலும், சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக வங்கியிடம் இருந்து மெசேஜ் வரும்போதுதான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை அந்த நபர் கண்டுபிடிக்கிறார். 2018ம் ஆண்டு ஹைதராபாத்தில் மொபைல் சிம் கார்டு விற்பனையாளர், வாடிக்கையாளர்களின் கைரேகைகள் மற்றும் மொபைல் எண்களை நகல் எடுத்து ஏமாற்றுவதற்காக பின்பற்றிய அதே முறைதான் இதிலும் பின்பற்றப்பட்டுள்ளது.
பெங்களூரு வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் சில சமயங்களில் சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகங்களுக்குச் சென்று சொத்துகளை விற்றோ அல்லது வாங்கவோ பதிவு செய்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் வழங்கிய ஆவணங்கள், முத்திரைகள் மற்றும் பதிவுத் துறையின் இணைய முகப்பான (Portal) காவேரி 2.0 இல் பதிவேற்றப்பட்டவுடன் பொது ஆவணங்களாக மாறிவிடும்.
