நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கொந்தளித்த திமுக: மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு சரியாகச் செயல்படவில்லை என்றும், ஏற்கெனவே போதுமான நிதி வழங்கப்பட்டுவிட்டது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் ஆளும் திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நிர்மலா சீதாராமன், தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் அதில் நடைபெற்ற மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அதில் டிசம்பர் 12ஆம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை வந்தபோதும்கூட தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டை
வைத்துள்ளார் அவர்.

மேலும், ஏற்கெனவே தமிழ்நாட்டுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பேரிடர் நிதியான 900 கோடி ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி ஏற்கெனவே தமிழ்நாடு அரசிடம் 813.15 கோடி பேரிடர் நிதி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

“மாநில அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோருக்கு முன்பாகவே தென் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு உதவியது தேசிய பேரிடர் மீட்புக்குழுவே. அதற்கு பிரதமர் நரேந்திர மோதியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தான் காரணம்,” என்றும் கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

“தென் மாவட்டங்கள் தண்ணீரில் மிதந்தபோது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி வந்திருந்தார்” என்ற குற்றச்சாட்டையும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளனர்.