ஆளுநர் உரையை வாசிக்க ஆர்.என்.ரவி மறுப்பு – அவையில் என்ன நடந்தது? சபாநாயகர் கூறியது என்ன?

ஆளுநர் உரையில் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருப்பதாகவும் சட்டப்பேரவையில் தேசிய கீதத்திற்கு போதுமான மரியாதை தரப்படவில்லை என்றும் கூறி, உரையை வாசிக்க மறுத்திருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. இதற்கு முன்பு இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றனவா?

அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்
2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால்,ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கவிருந்தது. அவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, 10 மணிக்கு வந்தடைந்தார். தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை துவங்கியது.

இதற்குப் பிறகு ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவை துவங்கும் முன்பாகவும் முடியும்போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார். மேலும், ஆளுநர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவற்றை வாசிப்பது அரசியல் சாஸனத்தை அவமதிப்பதாக அமையும் என்று கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.
றிவிட்டு, உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.

இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சில கருத்துகளை முன்வைத்தார். “ஆளுநர் குறைவாக வாசித்ததை நான் குறையாகச் சொல்லவில்லை. அதற்குப் பிறகு, ஜனகனமன வாசித்திருக்க வேண்டும் என்பதை ஒரு கருத்தாகச் சொன்னார்கள். எல்லோருக்கும் கருத்துகள் இருக்கும்.

இவ்வளவு பெரிய மழை, வெள்ளம் வந்த பிறகும் ஒரு பைசாகூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிஎம் கேர் நிதியில் உள்ளது. அதற்குக் கணக்குக்கூட கிடையாது. அதிலிருந்து ஒரு 50,000 கோடி ரூபாயை வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என நான் கூட கேட்க முடியும். சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும் கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்ததல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்” என்று கூறினார்