இந்துத்வா அரசியல்வாதியான மோதியுடன் இஸ்லாமிய நாடுகள் நட்பு பேணுவது எப்படி?

பிரதமர் நரேந்திர மோதி தனது இரண்டு நாள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலைத் திறந்து வைத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 27 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலுக்கான நிலம், அந்நாட்டு அதிபர் ஷேக் முகமத் பின் சயீத் அல் நஹ்யானால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில், இந்த கோவில் திறப்பு விழா பிரதமர் நரேந்திர மோதிக்கு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அறுபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் முன் உரையாற்றியுள்ளார் பிரதமர் மோதி. இதனை தொடர்ந்து துபாயில் நடைபெறும் உலக அரசாங்க உச்சி மாநாடு 2024 இல் கலந்து கொண்டுள்ளார்.
கடந்த மாதம், குஜராத் வந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர், பிரதமர் மோதியுடன் பேரணியில் கலந்து கொண்டார். இந்நிலையில் மோதியின் இந்த பயணம் மதம், அரசியல் மற்றும் முதலீடு என அனைத்து நோக்கங்களையும் உள்ளடக்கியது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் அப்துல் நாசர் அல்ஷாலி, “ பிரதமர் மோதியின் இந்த பயணம் சகிப்புத்தன்மை மற்றும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் தன்மைகளுடன் தொடர்புடையதாக ஐக்கிய அரபு அமீரகம் கருதுகிறது. இந்த விழுமியங்களே நமது இருதரப்பு உறவுகளுக்கு
ஐக்கிய அரபு அமீரகத்தின் மதம் இஸ்லாம். மறுபக்கம் நரேந்திர மோதியின் ஆட்சியின் கீழ் இந்திய இஸ்லாமியர்கள் நடத்தப்படும் விதம் குறித்தான கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது.

இருப்பினும், இவை அனைத்தையும் கடந்து சமீப காலமாகவே இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

புவிசார் அரசியல் ரீதியாக இந்தியாவுக்கு அதிகரிக்கும் முக்கியத்துவம், அதன் வேகமான பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணங்களினாலேயே ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமத் பின் சயீத் அல் நஹ்யானை தனது சகோதரர் என்று அழைத்துள்ளார் பிரதமர் மோதி. ஐக்கிய அரபு அமீரகம் 2019ஆம் ஆண்டு, தங்கள் நாட்டின் உயரிய ‘ஆர்டர் ஆஃப் சயீத்’ விருதை நரேந்திர மோதிக்கு வழங்கி சிறப்பித்தது.

பிரதமர் மோதி திறந்து வைத்த கோவிலின் தலைமை பூசாரியான பிரம்ம விஹாரிதாஸ் சுவாமி, “இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இதற்கு முன்பு இவ்வளவு உறுதியானதாக இருந்ததில்லை” என்று கூறியுள்ளார்.