உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதி உடன்பாடு – பாஜக ஆதிக்கத்தை தகர்க்க முடியுமா?
பஞ்சாப், மேற்கு வங்கத்தை தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் இந்தியா கூட்டணியின் நிலை குறித்து தேசிய அரசியலில் கடந்த 2 நாட்களாக நீடித்த விவாதம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரசும், சமாஜ்வாதியும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி உடன்பாட்டை இறுதி செய்துள்ளன. அதன்படி, காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் எஞ்சிய தொகுதிகளில் சமாஜ்வாதி உ ள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பிற கட்சிகளும் போட்டியிடும்.
உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் நிலை குறித்த சர்ச்சை எழக் காரணமாக அமையும் அளவுக்கு அகிலேஷ் யாதவ் என்ன பேசினார்? அடுத்த இரண்டே நாட்களில் உடன்பாடு எட்டப்பட்டது எப்படி? காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் என்ன பேசினர்? உத்தரபிரதேசத்தில் 10 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் பா.ஜ.க.வை காங்கிரஸ் – சமாஜ்வாதியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியால் தோற்கடிக்க முடியுமா?
அகிலேஷ் பேச்சால் சர்ச்சை
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை அமேதியில் இருந்தார். 2019 வரை, ராகுல் காந்தி இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார்.
அமேதியில் நடந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரடியாக பாஜக மீது குற்றம்சாட்டினார்.
“அவர்கள் (பாஜக) உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் அமேதியில் பணியாற்ற விரும்பவில்லை. பகையை உருவாக்க சதி செய்கிறார்கள்” என கார்கே தெரிவித்தார்.
பாஜகவை விட சமாஜ்வாதி குறித்து கார்கே என்ன சொன்னார் என்பதில் தான் பலரும் ஆர்வம் காட்டினர்.
அமேதியில் நடைபெற்ற இந்த காங்கிரஸ் பேரணிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து தெரிவித்தார். இது இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியது.
இதனால், உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி என்ன ஆகும்? என்ற கேள்வியை தேசிய அரசியலில் பெரிதும் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியது.
