அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் – பெரும்பான்மை பெற்றது எப்படி?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தமது கட்சிகளின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான பிரதிநிதித்துவ பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவைப் பெற்றுள்ளனர்.

நான்கு மாகாணங்கள், ஒரு அமெரிக்க பிரதேசம் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஜனநாயகக் கட்சியினர் செவ்வாயன்று தங்கள் முதன்மைத் தேர்வுகளை நடத்தினர்.

இதன் விளைவாக, அமெரிக்க வாக்காளர்கள் எட்டு மாதங்களில் அதிபர் தேர்தலை எதிர்கொள்வார்கள். இந்தக் கோடையில் நடைபெறும் கட்சி மாநாடுகளில் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.
கடந்த செவ்வாயன்று 81 வயதான அதிபர் ஜோ பைடன் பேசியபோது, “டிரம்ப் முன்வைக்கும் அச்சுறுத்தல் முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கும் தருணத்தில் வாக்காளர்கள், தான் மீண்டும் போட்டியிடும் முயற்சியை ஆதரிப்பதை கௌரவமாகக் கருதுவதாக” கூறினார்.

நேர்மறையான பொருளாதாரப் போக்குகளை மேற்கோள் காட்டி, அமெரிக்கா “மீண்டும் வருவதற்கான(பாதையின்) நடுவில்” இருப்பதாக அவர் கூறினார். ஆனால் ஒரு ஜனநாயக நாடாக அதன் எதிர்காலத்திற்கு சவால்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கருக்கலைப்பு கட்டுப்பாடுகளை நிறைவேற்றவும் சமூக திட்டங்களைல் குறைக்கவும் முயல்பவர்களிடம் இருந்தும் சவால்களை எதிரக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

“அமெரிக்க மக்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என பைடன் தனது பிரசாரத்திற்கான தேர்தல் அறிக்கையில் கூறினார்.

பைடன் தற்போது அதிபர் பதவியில் இருப்பதால், இது அவருக்கு இயல்பாகவே பலத்தைத் தருகிறது. அவர், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வாவதற்கு அவர் கடுமையான சவால்களை எதர்கொள்ளவில்லை.
அவர் வயது மூப்பின் காரணமாக, அவர் அதிபர் பதவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் இருப்பதாக வாக்காளர்களிடம் இருந்து கருத்துகள் வந்தபோதிலும், அவர் சார்ந்திருந்த கட்சி அவருக்கு பக்கபலமாக இருந்தது.

இதற்கிடையில், 77 வயதான டிரம்ப், குடியரசுக் கட்சியின் வாக்காளர் தளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். இது அவரை நன்கு நிதியளிக்கப்பட்ட போட்டியாளர்களைவிட அதிக ஆதரவு பெற்று வேட்பாளர் தேர்வில் வெற்றி பெறுவதற்கு உந்தியது.