தமிழ்நாட்டில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பு – ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக-கலாசார காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் சென்னை ஐஐடி மேற்கொண்ட ஆராய்ச்சியொன்றில், இந்திய அளவில் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் 17.2% ஆக இருந்த நிலையில், 2016-2021க்கு இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில் 21.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதில், தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் மேற்கொள்வது, 43.1 சதவிகிதத்தில் இருந்து 49.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மருத்துவ ரீதியான சிக்கல்கள் குறைந்துள்ள போதிலும் (42.2 சதவிகிதத்திலிருந்து 39.5 சதவிகிதமாக குறைந்துள்ளது) அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரித்திருப்பதாக, அந்த ஆய்வு காட்டுகிறது. இந்த ஆய்வு நிபுணத்துவ மதிப்பீடு செய்யப்பட்டு, பிஎம்சி பிரெக்னன்சி மற்றும் சைல்ட்பர்த் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. 2015-26 மற்றும் 2019-21 இல் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தரவுகளை தொகுத்து, இந்த ஆய்வு செய்துள்ளனர்.
குறிப்பாக, உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான வாய்ப்பு உடல் எடை குறைவாக உள்ள பெண்களை விட இருமடங்கு அதிகம் என்றும், 35-49 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் 15-24 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் அறுவைகிச்சை பிரசவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்களுக்கு அறுவை சிகிச்சை பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்கிறது அந்த ஆய்வு.
அறுவை சிகிச்சை பிரசவங்கள் குறித்து இந்த ஆய்வில், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களின் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சத்தீஸ்கரில் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அறுவை சிகிச்சை பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு அதிகம் என்றும் தமிழ்நாட்டில் அதுவே மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறுகிறது அந்த ஆய்வு.
இதற்கு இரு மாநிலங்களிலும் உள்ள பொது சுகாதார கட்டமைப்பில் உள்ள வித்தியாசத்தையும் இந்த ஆய்வு அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. சத்தீஸ்கரில் 2021-ஆம் ஆண்டில், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்கள் 77% நிரப்பப்படவில்லை. சத்தீஸ்கரில் தனியார் மருத்துவமனைகளுக்கு பணக்காரர்களே அதிகளவில் செல்வது, அந்த சுகாதார வசதியை ஏழைகள் அணுக முடியாததை காட்டுவதை பிரதிபலிக்கிறது.
தமிழ்நாட்டில் இதே காலக்கட்டத்தில் 73 சதவிகித ஏழைகள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் ஆனால், ஏழைகள் அல்லாதோர் என வரையறுக்கப்பட்டவர்களில் இந்த விகிதம் 64% ஆக இருப்பதாகவும் அந்த ஆய்வில் சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்தீஸ்கர் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஏழைகள் அல்லாதோருக்கு தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் மேற்கொண்ட நிலையில், தமிழ்நாட்டில் ஏழைகளே அதிகம் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
தமிழ்நாட்டில் 2019-21 காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சுமார் 40% அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இது இந்திய சராசரியான 16 சதவிகிதத்தைவிட அதிகம். சத்தீஸ்கரில் இது 10 சதவிகிதமாக உள்ளது.
அதேபோன்று, அறுவை சிகிச்சை பிரசவங்கள் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் 64.2 சதவிகிதமாகவும் இந்திய சராசரி 49.7 சதவிகிதமாகவும் சத்தீஸ்கரில் 58.9 சதவிகிதமாகவும் உள்ளது.
இந்தியாவில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து 21.5% அறுவை சிகிச்சை பிரசவங்கள் இக்காலக்கட்டத்தில் நடைபெற்றுள்ளன.
அறுவை சிகிச்சை பிரசவங்களின் உயர்வுக்கு அப்பெண்களின் சமூக-பொருளாதார காரணிகள், கல்வி, சுகப்பிரசவம் குறித்த பயம் உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மேலும், எந்த சுகாதார சேவையை அணுகுகிறோம் என்பதை பொறுத்து அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடைபெறுவது அதிகரிப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
