ஆஸ்திரேலிய மனைவியால் பறிபோன மன்னர் பதவி, மன்னரான சிறுவர்கள் – தொண்டைமான்களின் வரலாறு

தமிழ்நாட்டில் ஒரு மன்னர் வாழ்ந்த அரண்மனையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படுவது புதுக்கோட்டையில் மட்டும்தான்.

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட முன்வடிவுவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப் பேரவையில் கடந்த வாரம் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியாக மாறும். 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உதயமானது.

அப்போது 99.99 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஒரு அரண்மனை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக மாறியது எப்படி? புதுக்கோட்டையின் அடையாளமாக இருக்கும் தொண்டைமான்கள் யார்? கட்டபொம்மனுக்கும், முத்துலட்சுமி ரெட்டிக்கும் அவர்கள் செய்தது என்ன?
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 17ஆம் நூற்றாண்டில் தொண்டைமான்கள் ஆட்சிக்கு வந்தனர்.

கடந்த 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், புதுக்கோட்டை மண்டலத்தில் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகத் தற்போது வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவில் உள்ள பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தில் இருந்து தொண்டைமான்களின் முன்னோர்கள் விஜயநகர ராணுவத்துடன் இடம்பெயர்ந்து புதுக்கோட்டைக்கு வந்துள்ளனர்.

இடம்பெயர்ந்து வந்தவர்களில் ஒரு குழுவினர் தங்குவதற்கு கறம்பக்குடி மற்றும் அம்புக் கோவில் பகுதியில் உள்ளூர் பல்லவராய குறுநில மன்னர் நிலம் ஒதுக்கியதாகவும், பின்னாளில் புதுக்கோட்டையை ஆட்சிபுரிந்த தொண்டைமான்களின் முன்னோர்களாக அவர்கள் திகழ்ந்தனர் என்றும் தமிழக அரசு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.