பிரிட்டனின் அடுத்த பிரதமராகப் போகும் கியர் ஸ்டாமர் யார்?

வயது : 61
கல்வி : ரெய்கேட் கிராமர் பள்ளி, லீட்ஸ் பல்கலைகழகம், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம்.
குடும்பம் : பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் பணியிட சிக்கல்களுக்கான மனநல ஆலோசகரான விக்டோரியா அலெக்ஸாண்டரை திருமணம் செய்துள்ளார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நாடாளுமன்ற தொகுதி : 2015ம் ஆண்டு முதல் ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ்
தொழிலாளர் கட்சியின் தலைவரான கியர் ஸ்டாமர் அடிக்கடி தன்னை, “உழைப்பாளி வர்க்கப் பின்னணி” கொண்டவர் என்று கூறிக் கொள்பவர். அவர் வளர்ந்து வந்த ஆக்ஸ்டட், சர்ரே என்ற சிறு நகரத்தில் உள்ள “pebble-dash semi” எனப்படும் சாதாரண வீடுகளை அடிக்கடி குறிப்பிடுவார்.

அவரது தந்தை தொழிற்சாலைகளுக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். அவரது தாய் செவிலியராக பணிபுரிந்தார். அவரது தாய் ‘ஸ்டில்ஸ்’ என்ற உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியே உடலை தாக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவரால் பேசவும் நடக்காமலும் போய்விட்டது.

கியர் ஸ்டாமர் பயின்று வந்த ரெய்கேட் கிராமர் பள்ளி, அவர் அங்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் தனியார் நிர்வாகத்துக்கு மாறிவிட்டது. அவருக்கு 16 வயது ஆகும் வரை உள்ளூர் நிர்வாகம்தான் அவரது கல்விக் கட்டணத்தை செலுத்தியது.

பள்ளிப்படிப்பு முடித்து பல்கலைக் கழத்துக்கு செல்லும் தனது குடும்பத்தின் முதல் நபரானார் கியர் ஸ்டாமர். லீட்ஸ் பல்கலைகழகத்தில் சட்டம் படித்தார், பின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் மேற்படிப்பு முடித்தார்.
1987-இல் அவர் பாரிஸ்டர் பட்டம் பெற்றார் (வழக்கறிஞர்). மனித உரிமைகள் சட்டத்தில் நிபுணராகி வந்தார். கரீபியன், ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத் தண்டனை கைதிகளுக்காக வாதாடினார்.

1990களின் இரண்டாவது பாதியில், ‘மெக் லைபல்’ செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக கட்டணமின்றி வாதாடினார். ‘மெக் லைபல்’ செயற்பாட்டாளர்கள் மெக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் .

2008-ல் பிரிட்டன் மற்றும் வேல்ஸ்-ல் அரசு வழக்கறிஞர்களுக்கான இயக்குநர் என்ற பொறுப்பை பெற்றார்.