மோதியின் யுக்ரேன் பயணம் குறித்த ஊகங்கள்- ரஷ்ய ஊடகங்களில் ஏன் இவ்வளவு விவாதம் நடக்கிறது?

பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் மாதம் யுக்ரேனுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே மத்தியஸ்தம் செய்ய வாய்ப்பிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்திய நாடாளுமன்றத்துடன் தொடர்புடைய ஒரு வட்டாரம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோதி யுக்ரேன் செல்லக்கூடும் என்று தூதரக வட்டாரங்களை குறிப்பிட்டு இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய அரசு ஊடகமான ஆர்டி (RT) செய்தி வெளியிட்டுள்ளது.

“ யுக்ரேன் பிரச்னையில் இந்தியா மத்தியஸ்தம் செய்ய வாய்ப்புள்ளது. பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணத்தின் போது இது நடக்கலாம். இது இன்னும் பரிசீலனையில் உள்ளது” என்று இந்திய பிரதமரின் யுக்ரேன் பயண வாய்ப்புகள் குறித்த தகவலை வழங்கியவர்கள் கூறுவதாக டாஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“ரஷ்யாவுடன் இந்தியா நீண்டகாலமாக நட்புறவை கொண்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும் பிரதமர் நரேந்திர மோதி நல்லுறவைக் கொண்டுள்ளார். யுக்ரேனும் இந்தியாவுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளன.”

“ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ முடியும் என்று இந்தியா பலமுறை கூறியுள்ளது. இருப்பினும், இரு தரப்பும் ஒப்புக்கொண்டால் மட்டுமே மத்தியஸ்தம் செய்ய முடியும். யுக்ரேன் எதிர்கொண்டு வரும் நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும்” என்று தகவலை வழங்கியவர்கள் டாஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் ஆகஸ்ட் மாதம் நிகழலாம் என டாஸ் செய்தி குறிப்பிடுகிறது.

இது இந்திய ஊடகமான WION-ன் செய்தியை மேற்கோள் காட்டியுள்ளது. அதில் “இந்திய பிரதமர் அநேகமாக ஆகஸ்ட் 23 அன்று யுக்ரேன் செல்வார்” என்று தகவலை வழங்கியவர்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் அரசு ஊடக செய்தியில் வெளியான தகவல்
ரஷ்ய அரசின் ஊடகமான ‘ஆர்டி (RT) ’, இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை மேற்கோள் காட்டி, ஆகஸ்ட் மாதம் யுக்ரேன் தலைநகர் கீவ் செல்ல மோதி திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

ஆர்டி இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், ”மோதி ஆகஸ்ட் 23ஆம் தேதி கீவ்வை அடையலாம். ஜூலை மாதம், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் யுக்ரேனிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசினர்”’ என்று இந்திய ஊடகங்களில் வந்த செய்தியை மேற்கொள்காட்டியுள்ளது.

”மோதி ரஷ்யாவுக்கு சென்றது ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளுக்குப் பலத்த அடியாக அமைந்தது. மேலும் மோதியின் ரஷ்ய பயணத்தால் அமெரிக்கா எரிச்சலடைந்துள்ளது என கூறப்படுகிறது” என ஆர்டி செய்தியில் எழுதியுள்ளனர்.

சர்வதேச செய்தி முகமையான ராய்ட்டர்ஸ், ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோதி யுக்ரேன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், டெல்லியில் உள்ள யுக்ரேன் தூதரகம் இந்த தகவலை ராய்ட்டர்ஸிடம் உறுதிப்படுத்தவில்லை. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.