‘பாக்கெட்டில் கை, வெள்ளி பதக்கம்’- துருக்கி துப்பாக்கி சுடும் வீரர் யூசுஃப் டிகெக்கின் பாணி கைதட்டல் பெற்றது ஏன்?
ஜூலை 30 ஆம் தேதி இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்ற அந்தப்போட்டியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் உலகின் பல நாடுகளிலும் விவாதிக்கப்படுகிறது.
இந்தப் படத்தைப் பார்த்து சிலர் ஆச்சரியம் வெளியிட்டனர். மற்ற சிலர் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
51 வயதான துருக்கி துப்பாக்கி சுடும் வீரர் யூசுஃப் டிகெக்கின் படம் அது. பாரிஸ் ஒலிம்பிக்கில் அவரது பாணி மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
மனுவும் சரப்ஜோத் சிங்கும் வெண்கலப் பதக்கத்தை வென்ற அதே போட்டியில், துருக்கியின் யூசுஃப் மற்றும் செவ்வால் இல்யாடா தர்ஹான் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.
ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, ஒரு சாதாரண கண் கண்ணாடி அணிந்து காணப்பட்ட யூசுஃப் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
ஆனால் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் யூசுஃப் இலக்கை பார்த்து சுட்ட விதம் மற்றவர்களை விட வித்தியாசமானதாக இருந்தது.
துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர்கள் பொதுவாக தங்கள் காதுகளில் பெரிய ஹெட்ஃபோன்கள் மற்றும் இலக்கை துல்லியமாக பார்க்க உதவும் ஒரு வகையான கண்ணாடி அணிந்து காணப்படுவார்கள்.
கண்ணாடி லென்ஸ்கள், சுற்றுப்புறத்தை மறைத்து இலக்கை சரியாக பார்க்க உதவும் பிளைண்டர்கள் மற்றும் இயர் ப்ரொடெக்டர் ஆகியவை இவற்றில் அடங்கும்.
இவை எல்லாமே துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
பொதுவாக துப்பாக்கி சுடும் வீரர்கள் கண்களில் விழும் ஒளியைக் குறைக்க வைசர் எனப்படும் மறைப்பையும், சிறந்த முறையில் குறி வைக்க உதவும் ஒரு பிளைண்டரையும் அணிவார்கள்.
ஆனால் பாரிஸ் ஒலிம்பிக்கில் துருக்கி துப்பாக்கி சுடும் வீரர் யூசுஃப் டிகெக் இவை எதுவும் இல்லாமல் குறிவைத்து சுட்டுள்ளார்.
இருப்பினும் சத்தத்தால் கவனம் சிதறாமல் இருக்க மிகவும் சிறிய காது செருகிகளை (ear plug) யூசுஃப் அணிந்திருந்தார்.
இந்தப்போட்டி நடந்து பல நாட்கள் ஆன பிறகும் கூட சாதாரண மக்கள் முதல் பணக்கார தொழிலதிபர் எலோன் மஸ்க் வரை பலரும் யூசுஃப்பின் படங்களுக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.
