அயோத்தி: ராமர் கோவிலுக்காக புதுப்பொலிவு பெறும் நகரத்தின் கவனிக்கப்படாத மறுபக்கம்
கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அங்கு ராமர் கோவில் கட்டப்படுவதற்கான முன்னெடுப்புகள் நடந்து வந்ததில் இருந்து சர்ச்சையின் மையத்திலேயே இருந்து வருகிறது உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரம்.
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கோவில் கட்ட ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்றன.
தற்போது கோவிலின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்து, வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி கோவிலைத் திறந்து வைக்கிறார். பிரான் பிரதிஷ்டா என்ற கும்பாபிஷேக நிகழ்வும் அன்று நடைபெறவுள்ளது.
இதையொட்டி ‘அயோத்தி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து சுமார் 30,000 கோடி ரூபாய் செலவில் பல மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருகின்றன. இதனால், சிறிய, ஆட்கள் அதிகம் வந்து போகாத நகரமாக இருந்த அயோத்தியின் முகம் தற்போது வேகமாக மாறி வருவதாகக் கூறப்படுகிறது.
அயோத்தியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் அங்கு நேரடியாகச் சென்றது.
