உலககக்கோப்பைக் கால்பந்து: ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சி பிரிவில் சோச்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து பெரு அணியுடன் ஆஸ்திரேலியா மோதியது. இதில் பெரு அணி 18-வது நிமிடத்தில் கோல் அடித்தது. பாவ்லோ குயரேரோ உதவியுடன் பந்தை பெற்ற ஆன்ட்ரே காரில்லோ, பாக்ஸின் வலது புறத்தில் இருந்து கோல்கம்பத்தின் இடது புறத்தில் பந்தை திணிக்க பெரு அணி 1-0 என முன்னிலை பெற்றது.

25-வது நிமிடத்தில் பாவ்லோ குயரேரோ பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்தின் மையப்பகுதியில் தடுக்கப்பட்டது. 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் தாமஸ் ரோஜிக், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்தை, கோல்கம்பத்தின் இடது ஓரத்தில் கோல்கீப்பர் பெட்ரோ காலஸ் தடுத்தார். 40-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிரென்ட் சைன்ஸ்பரி, இலக்குக்கு மிக அருகில் நின்று தலையால் முட்டிய பந்து இடதுபுறம் விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது. முதல் பாதியில் பெரு அணி 1-0 என முன்னிலை வகித்தது.

2-வது பாதி ஆட்டம் தொடங் கிய 5-வது நிமிடத்தில் பாவ்லோ குயரேரோ, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்து கோல்கம்பத்தின் வலது ஓரம் வழியாக வலைக்குள் பாய்ந்தது. இதனால் பெரு அணி 2-0 என்ற முன்னிலையை அடைந்தது. 52-வது நிடத்தில் ஆஸ்திரேலியாவின் மைல் ஜெடினக் தலை யால் முட்டிய பந்து, கோல்கம்பத்தின் மையப்பகுதியில் தடுக்கப்பட்டது. 59-வது நிமிடத்தில் டிம் ககில், பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து அடித்த பந்து இடதுபுறம் விலகிச் சென்றது. 67-வது நிமிடத்தில் டேனியல் அர்ஸானி, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து உதைத்த பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது. 83- வது நிமிடத்தில் மைல் ஜெடினக் இலக்கை நோக்கி அடித்த பந்தும் கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது. கடைசி வரை போராடியும் ஆஸ்திரேலிய அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது.

முடிவில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்று தொடரில் இருந்து வெளியேறியது. அதேவேளையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை பெறலாம் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி பரிதாபமாக தோல்வியடைந்து வெளியேறியது.