விராட் கோலியின் இளம்படியுடன் இந்தியா டி20 கிரிக்கெட் தொடரை வென்றது – 5 முக்கிய காரணங்கள்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரை 2-1 என வென்றது.

புதன்கிழமை மும்பையில் நடைபெற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா அதிரடி ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 240 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுக்க, போட்டியையும், தொடரையும் இந்தியா வென்றது.

கே. எல். ராகுல் ஆட்டநாயகனாகவும், விராட் கோலி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

கே. எல். ராகுல் கோப்புப்படம்

இந்த போட்டியையும், தொடரையும் இந்தியா வெல்ல 5 முக்கிய காரணங்கள் இவை.

அதகளம் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள்

மும்பை டி20 போட்டி மற்றும் இந்த தொடரின் 3 போட்டிகளிலும் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. குறிப்பாக விராட் கோலி மற்றும் கே. எல். ராகுல் ஆகிய இருவரும் அதிரடியாகவும், நேர்த்தியாகவும் விளையாடினர்.

கடைசி டி20 போட்டியில் ரோகித் சர்மா தனது வழக்கமான அதிரடி பாணியில் ஆடினார். இரண்டாவது போட்டியில் இந்தியா தோற்றாலும் சிவம் துபே அந்த போட்டியில் நன்றாக பேட்டிங் செய்தார்.

இளம் இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியம்

இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் இரண்டு அணிகளும் ரன் மழை பொழிந்த நிலையில், பந்துவீச்சாளர்களின் பணி சவால் மிகுந்ததாக இருந்தது.

இந்நிலையில் இளம் இந்திய பந்துவீச்சாளர்களான சாஹல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் வெவ்வேறு தருணங்களில் சிறப்பாக பந்துவீசினர்,

கோப்புப்படம்

இறுதி போட்டியில் முகமது ஷமியும், முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவும் துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தனர்.

விராட் கோலியின் தலைமை

விராட் கோலியின் சிறப்பான தலைமை பண்பு இந்த கடைசி போட்டியிலும், தொடரிலும் நன்கு வெளிப்பட்டது. பந்துவீச்சாளர்களை மாற்றியது, ஆடும் 11 வீரர்கள் தேர்வு போன்றவற்றில் அவரது முடிவு நன்றாக இருந்தது வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

மேலும் சிறப்பான பேட்டிங் செய்து அணியின் வெற்றிக்கு பங்களித்த விராட் கோலி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் நிதானமில்லாத பேட்டிங்

இந்த தொடரை இந்தியா வெல்வதற்கு இணையாக வாய்ப்புகள் இருந்தும் மேற்கிந்திய தீவுகள் அணியால் தொடரை வெல்ல முடியாததற்கு முக்கிய காரணம் அந்த அணி வீரர்களின் அவசர பாணி பேட்டிங்தான்.

மிகப்பெரிய இலக்கை துரத்திய நேற்றைய போட்டியில் எந்த ஒரு கட்டத்திலும் அந்த அணியால் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை சேர்க்க முடியவில்லை. இது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. முதல் போட்டியிலும் இவ்வாறான நிலையே.

முன்னேற்றம் கண்ட இந்திய அணியின் ‘பீல்டிங்’

இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்ற நிலையில், மும்பையில் நடைபெற்ற போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வலுவான அளவு ரன்களை குவித்தாலும், இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் அணியின் பீல்டிங் தான்.

கோப்புப்படம்

முதல் இரண்டு போட்டிகளில் பல கேட்ச்களை தவறவிட்ட இந்திய அணியின் பீல்டிங் மற்றும் கேட்சிங் இந்த போட்டியில் மிகவும் அற்புதமாக இருந்தது.

குறிப்பாக ஷிவம் துபே, கே. எல். ராகுல் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இந்த போட்டியில் மிக சிறப்பாக பீல்டிங் செய்தனர்.