சகலவசதிகளுடன் சுகமான வாழ்க்கை: அதிர வைக்கும் சிறப்பு முகாம் நபர்களின் பின்னணி: இவர்களுக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்!

கோவை: திருச்சி சிறப்பு முகாமிலுள்ள வெளிநாட்டு நபர்களை விடுவிக்க அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருவது போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நபர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக வெளிநாடு தப்பி செல்லுதல், ஆன்லைன் பண மோசடி, போலி பாஸ்போர்ட் போன்ற குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.

இவர்கள் மீதுள்ள நிலுவை வழக்கில் ஜாமின் பெற்று அல்லது வழக்கில் விடுவிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் தாயகம் திரும்பும் வரை, இந்த முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பர். சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் சிறை கைதிகள் போல் நடத்தப்பட மாட்டார்கள். இவர்கள் சமைத்து உண்ண, மொபைல்போன், லேப்டாப் பயன்படுத்த சிறப்பு அனுமதி உள்ளது. இவர்கள் குடும்பத்தினரும் இங்கு வந்து பார்த்து செல்லலாம்.

இந்நிலையில் இங்குள்ள இலங்கை நபர்கள், தங்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகின்றனர். இதை ஆதரித்து அரசியல்வாதிகளும் குரல் கொடுத்து விடுவிக்க கோரி வருவது போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள நபர்களின் பின்புலம், வழக்கு விபரங்கள் தெரியாமல் இவர்களை விடுவிக்க குரல் கொடுப்பது நல்லதல்ல என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:திருச்சி சிறப்பு முகாம், வருவாய் துறை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டாலும் இதற்கும் சிறைத்துறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அதேநேரம் இந்த சிறப்பு முகாம் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும். இங்குள்ள நபர்கள் தினமும் எண்ணப்பட்டு, கையெழுத்து போட வேண்டும்.இங்குள்ள வெளிநாட்டு நபர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி ஜாமினில் விடுவிக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் போதை பொருள் கடத்தல், பாஸ்போர்ட் மோசடி போன்ற வழக்குகளில் சிக்கியவர்கள். இவர்களில் சிலர் லம்போகினி கார், பல்வேறு இடங்களில் பண்ணை வீடு வைத்துள்ளனர். மேலும் சர்வதேச போதை பொருள், ஆயுத கடத்தல் ‘நெட்வொர்க்’கில் உள்ளனர்.

அதனால் தான் இந்த மாபியா கும்பலின் நடவடிக்கை, நடமாட்டத்தை ‘க்யூ’ பிரிவு போன்றோர் கண்காணித்து வருகின்றனர். இவர்களை சந்திக்கும் நபர்கள், அவர்களின் பின்புலம் குறித்தும் கண்காணிக்கப்படுகிறது. சிறப்பு முகாமில் உள்ள நபர்களை விடுவித்தால் அவர்கள் மீண்டும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தங்கள் நாடுகளுக்கு தப்பி செல்ல வாய்ப்புகள் அதிகம். தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இங்கு இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டு அரசு உதவிகளை செய்து வருகிறது. இதற்கும் சிறப்பு முகாமுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் சேர்த்த நபர்களை விடுவித்தால் மீண்டும் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.