அதிமுக வாக்குகள் பா.ஜ.க.வுக்கு செல்லுமா? கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டிலும் நடக்குமா?
இரண்டே நாட்களில், பாரதிய ஜனதா கட்சி கர்நாடகாவில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது, தமிழ்நாட்டில் ஒரு கூட்டணிக் கட்சியை இழந்துள்ளது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை (ஜேடிஎஸ்) தனது கூட்டணிக் கட்சியாக அறிவித்துள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் அ.தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துள்ளது. இது உண்மையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கேள்விக்குக் காரணம், 2019-ல் கூட்டணி அமைவதற்கு முன்பே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், குறிப்பாக மாநிலங்களவையில் சமீப காலம் வரை பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இருக்கவில்லை. அதனால் அதற்கு அ.தி.மு.க தேவைப்பட்டது. முக்கியமான சட்டங்களை
நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க.வுக்கு இந்த ஆதரவு தேவைப்பட்டது.
பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி பிரிந்ததற்கான விதையை பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை விதைத்தார். அவர் கூட்டணிக் கட்சித் தலைமையை மட்டும் விமர்சிக்காமல், திராவிடக் கட்சிகளின் தந்தையாகக் கருதப்படும் சி.என்.அண்ணாதுரை, மற்றும் மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா போன்றவர்களையும் தாக்கிப் பேசினார்.
ஒரு கட்சியின் மாநிலத் தலைவருக்கு, அதிகாரம் மிக்க மத்தியத் தலைமையின் அனுமதியின்றி கூட்டணிக் கட்சியின் தலைவர்களை தாக்கிப் பேசும் அளவுக்கு துணிச்சல் இருக்குமா என்பது இப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அ.தி.மு.க.வின் தலைவர்கள், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்த பின் தான் கூட்டணி முறிவு குறித்து அறிவித்தனர்.
