பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணி சாதிக்குமா? – மு.க.ஸ்டாலின் முன்வைத்த யோசனைகள் என்ன?

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று(வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளன. இந்தக் கட்சிகளுக்குள் எழுந்துள்ள ஒற்றுமை நீடிக்குமா, இந்தக் கூட்டணியால் பா.ஜ.கவை வீழ்த்த முடியுமா?

இந்த ஆண்டில் இந்திய அரசியலில் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாக ஜூன் 23 அமைந்திருக்கிறது. பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் பிகார் தலைநகர் பாட்னாவில் கூடி 2024இல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவது குறித்து வெள்ளிக்கிழமையன்று விவாதித்தனர். பிகார்முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஒருங்கிணைப்பில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்,தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டில் காலை 11.30 மணிக்குத் தொடங்கியது. எதிர்பார்த்ததைப் போலவே, நவீன் பட்நாயக், மாயாவதி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை. இதில் நவீன் பட்நாயக், சந்திரசேகரராவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது