கோவை கார் வெடிப்பு சம்பவம் – என்ஐஏவின் அதிகாரங்கள் என்ன?
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை முறைப்படி என்ஐஏவசம் வந்துள்ளது. ஒரு வழக்கை என்ஐஏவிடம் விசாரணைக்காக ஒப்படைப்பது என்றால் என்ன? என்ஐஏவின் அதிகாரங்கள் என்னென்ன?
கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன், முகமது தல்கா மற்றும் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய 5 சந்தேக நபர்களை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த ஐவர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) பயன்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (அக். 25) கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, கைதானவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174 மற்றும் வெடி மருந்துகள் சட்டப்பிரிவு 3ஏ ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கைதான ஐவர் மீதும் குற்றச்சதிக்கான 120பி, இரு வேறு குழுக்கள் இடையே பகைமையை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் சட்டப்பிரிவு 153ஏ ஆகியவை சேர்க்கப்பட்டிருந்தன.
சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம், வெடிமருந்துகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று (அக்.26) காலை கோவையில் என்ஐஏ விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்த வழக்கின் விசாரணையை என்ஐஏவுக்கு மாற்ற உரிய பரிந்துரைகளை செய்திட அக்கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
