ஆம்ஆத்மியின் புகைப்படத்தை ‘அபேஸ்’ செய்த காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட உள்ள யாத்திரை பிரசாரத்திற்காக அக்கட்சி ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தங்களுடையது எனக்கூறி ஆம்ஆத்மி கட்சி கிண்டலடித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் வரும் செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‛பாரத் ஜோடோ யாத்திரை’ (இந்திய ஒற்றுமை நடைபயணம்) என்ற பெயரில் யாத்திரை செல்ல உள்ளார். 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். டில்லியில் இன்று (ஆக.,23) நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரத் ஜோடோ யாத்திரைக்கான லோகோ, அடையாள முழக்கம், தீம் பாடல் ஆகியவற்றை காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியிட்டனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப்பக்கத்தில் யாத்திரைக்கு அழைப்பு விடுத்து பதிவிட்டுள்ளது. அதில், ‛எந்தக் குரலும் மவுனமாகாத, இளைஞர்கள் வேலைக்காக கை ஏந்தாத, பொருளாதாரம் சீர்குலைந்து போகாத, பன்முகத்தன்மை கொண்டாடப்படும், சமத்துவம் உறுதி செய்யப்படும் இந்தியாவை நாங்கள் கனவு காண்கிறோம். பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்து மாற்றத்தை வழிநடத்துங்கள்’ எனக் குறிப்பிட்டு தேசியக்கொடியுடன் சிலர் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.

இதனை கிண்டல் அடித்துள்ள ஆம்ஆத்மி கட்சி, ‛வணக்கம் காங்கிரஸ், இந்த படம் ஆம் ஆத்மி தொண்டர்களின் போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது. எங்களின் படங்களைப் பயன்படுத்தி பா.ஜ.,வின் எதிர்க்கட்சியாகக் காட்டிக் கொள்வது ஏன்? உண்மையில், நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்பதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.’ எனத் தெரிவித்துள்ளது.