காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சுயமாக முடிவெடுப்பாரா ஆட்டி வைக்கப்படுவாரா?

சோனியா காந்தி, பிரியங்கா காந்தியுடன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினர்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வாகியிருக்கிறார். அக்கட்சியின் தலைமை பதவிக்கு நடந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 7,897 வாக்குகள் கிடைத்துள்ளன.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூருக்கு 1,000 வாக்குகள் கிடைத்தன.

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டுகால வரலாற்றில் ஆறாவது முறையாக, அக்கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. சுதந்திரம் பெற்றதில் இருந்து கட்சியின் தலைமை பொறுப்பு பெரும்பாலும் காந்தி குடும்பத்தினர் கைகளில்தான் இருந்து வந்துள்ளது அல்லது சில நேரங்களில் தலைவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என காந்தி குடும்பத்தினர் (நேரு வழி குடும்பத்தினர்) முடிவு செய்த நிலையில், இந்த பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகிய இரு தலைவர்கள் போட்டியிட்டனர்.

வாக்களிக்க தகுதியான 9,900 கட்சி பிரதிநிதிகளில் 9,500 பேர் வாக்களித்தனர் என்று காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி தலைவர் மதுசூதன் மிஸ்திரி அறிவித்தார். இதைத்தொடர்ந்து புதன்கிழமை முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, நீண்ட காலமாக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் சோனியா காந்தியின் இடத்தில் இனி மல்லிகார்ஜூன் கார்கே புதிய தலைவராக இருப்பார்.

இதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக யார் வந்தாலும் அவர் பல சவால்களை சந்திக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவுகிறது.

புதிய தலைவர் எதிர்கொள்ளும் முக்கிய சவால்

கட்சியின் மீது தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவது, அனைவரும் தன்னை ஏற்றுக்கொள்ளச் செய்வது, தனது கருத்துக்களை ஏற்க வைப்பது போன்றவை புதிய தலைவர் எதிர்கொள்ளவிருக்கும் மிக முக்கியமான சவால்களாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதேவேளை தலைவரின் ‘ரிமோட் கன்ட்ரோல்’ (ஆட்டுவிப்பவராக) சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி இருப்பார்கள் என்பதால் உண்மையான அதிகாரம் காந்தி குடும்பத்தின் கைகளில்தான் இருக்கும் என்று பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மல்லிகார்ஜுன கார்கே, காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படுவதாலும், அந்த குடும்பத்தின் வேட்பாளராக அவர் கருதப்படுவதாலும், ரிமோட் கன்ட்ரோல் பற்றிய பேச்சு அடிபடுகிறது.

சில நாட்களுக்கு முன்பு கட்சியின் ‘கிளர்ச்சித் தலைவர்’ சஞ்சய் ஜா எழுதியிருந்த கட்டுரைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், “மல்லிகார்ஜுன கார்கேயின் அதிகாரபூர்வ வேட்புமனு – காங்கிரஸ் எப்படி தன்னைத்தானே தாழ்த்திக்கொள்கிறது” என்று தலைப்பிட்டிருந்தது.

தலைவர் பதவிக்கான தேர்தல் ஒரு கேலிக்கூத்து. ஏனென்றால் கார்கே, காந்தி குடும்பத்தின் ‘ஒரு காவலாளி’ என்று சஞ்சய் ஜா தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.