`சிபிஐ அமைப்பின் செயல்பாடு தமிழ்நாட்டில் தடுக்கப்படுகிறதா? பொது அனுமதி ரத்து என்றால் என்ன?

மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தமிழ்நாட்டில் இனி விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன் அனுமதியைப் பெற்றே விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐக்கு வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியைத் திரும்பப் பெற்றுள்ளது.

“மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என 1946ஆம் ஆண்டின் டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 6 கூறுகிறது.
கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று ஆணையிட்டுள்ளது.

இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் முன் அனுமதியைப் பெற்றே விசாரணையை மேற்கொள்ள வேண்டும்,” என்று அந்த அறிவிப்பு கூறுகிறது.