திமுகவை குறிவைத்து உருவாக்கப்படும் சர்ச்சைகளால் இந்தியா கூட்டணிக்கு என்ன சிக்கல்?
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்தியா கூட்டணியின் முக்கியமான அங்கமான திமுக பாஜகவின் இலக்காகியுள்ளது. திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான வார்த்தை போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
இந்தியா கூட்டணியை, குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில், எதிர்கொள்வதற்கான கருவியாக திமுக மாறி வரும் நிலையில், இதற்கு காரணம் திமுகவின் சில தவறான அணுகுமுறைகளா அல்லது மாநில அரசியலுக்கும் தேசிய அரசியலுக்கும் இடையேயான சிக்கலான உறவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கடந்த காலங்களில் நாம் பார்த்த பல சர்ச்சைகளின் பட்டியலில் சமீபத்திய வரவு வெள்ள நிவாரணம் தொடர்பானது. இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு இடையேயான வாதங்கள் மோசமானதாக மாறியுள்ளன.
தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கான நிவாரணத் தொகை கேட்ட போது, மத்திய அரசு “ஏ டி எம்” கிடையாது என்ற பொருளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் கூறுகிறார்.
இந்தக் கருத்துக்கு எதிர்வினையாற்றிய தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் ஆகிய உதயநிதி ஸ்டாலின், “அவர்களின் அப்பன் வீட்டு சொத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் வரி பணத்தை தான் கேட்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாகவே நிர்மலா சீத்தாராமன் சுமார் ஒருமணி நேராம் பத்திரிக்கையாளர் சந்திப்பை டெல்லியில் மேற்கொண்டார். அதன் கேள்விகளும், பதில்களும் பெரும்பாலும் தமிழிலேயே அமைந்தன.
அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் “அவர்களின் பாஷை அப்படி தான் இருக்கும். சனாதனத்தை அழிக்க மாட்டோம் , ஒழிப்போம் என்று கூறினாரே, அவர்களின் பாஷை அப்படி தான் இருக்கும். நீங்கள் அப்பன் வீட்டு சோத்தில் தான் அனுபவித்து வருகிறீர்கள் என கூறமுடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு மரியாதை கொடுத்து தானே ஆக வேண்டும்.
அப்பன் வீடு, ஆத்தா இந்த பேச்சு எல்லாம் நல்லது இல்ல. வாய் வார்த்தைகள் அளந்து வர வேண்டும்” என்றார்.
இந்த விவகாரம் இத்துடன் முடிந்துபோகவில்லை. மீண்டும் பதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அப்பன் என்பது கெட்ட வார்த்தையா, மரியாதைக்குரிய அமைச்சரின் மரியாதைக்குரிய அப்பாவின் பணத்தை கேட்கவில்லை என்று தான் கூறினேன்” என்று பதில் பேசியதுடன் சிலசமயம் ‘பெரியாரின் பாணி’ அவசியம் என்று அறிக்கை விட்டார்.
