திருப்பித் தர மாட்டேன்’ என வாக்குறுதி அளிக்க வேண்டுமா??
அகாதெமி விருதுகளுக்காகப் பெயர்களைப் பரிந்துரைக்கும்போது, அரசியல் காரணங்களுக்காக விருதைத் திரும்பத் தர மாட்டேன் என்ற வாக்குறுதியைப் பெற வேண்டுமென நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்று பரிந்துரைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சுற்றுலா, போக்குவரத்து மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த திங்கட்கிழமையன்று தனது பரிந்துரைகளை மாநிலங்களவைக்கு அளித்தது. அந்தப் பரிந்துரையில், கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு இலக்கிய மற்றும் கலாச்சார அமைப்புகள் விருதுகளை வழங்கிவருகின்றன. சாகித்ய அகாதெமி விருது போன்ற விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்படும்போது, அரசியல் காரணங்களுக்காக அந்த விருதுகளைத் திருப்பி அளிக்கப்போவதில்லை என்ற வாக்குறுதிகளை அளிக்க வேண்டும் என்றும் அதை மீறி விருதுகளைத் திருப்பி அளித்தால், வேறு எந்த விருதுகளுக்கும் அந்த கலைஞரையோ, எழுத்தாளரையோ பரிசீலிக்கக்கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலைக்குழுவில் இடம்பெற்றிருந்த சி.பி.எம்மின் ஏ.ஏ. ரஹீமும் காங்கிரஸ் கட்சியின் கே. முரளிதரனும் எதிர்த்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் உள்ள கலை, கலாச்சார அகாதெமிகள் அரசியல் சார்பற்றவை. இந்தியாவில் ஒரு கலைஞருக்குக் கிடைக்கும் உயர்ந்தபட்ச அங்கீகாரமாக அகாதெமி விருதுகளே இருக்கும் நிலையில், “அதில் அரசியலுக்கு இடமே இல்லை. ஆகவே, இந்த விருதைக் கொடுக்கும்போது அரசியல் காரணங்களுக்காக இந்த விருதைத் திருப்பி அளிக்கப்போவதில்லை என ஒரு வாக்குறுதியைப் பெற வேண்டுமென இந்தக் குழு பரிந்துரைக்கிறது. இது நாட்டிற்கே அவமானமாக இருக்கிறது” என அந்தக் குழு பரிந்துரைத்திருக்கிறது.
