நேருக்கு நேர் மோதிய பைடன் – டிரம்ப் – விவாதத்தில் என்ன பேசினர்?

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இருவரும் முதன்முறையாக நேருக்கு நேர் விவாதித்தனர்.

இந்த விவாதத்தில் தனிப்பட்ட தாக்குதல்களுக்குக் குறை இல்லை. மேலும், பைடன் அவ்வப்போது கம்மிய குரலில் பேசினார். இதனால், ஜனநாயக கட்சியினர் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், “மெதுவாக ஆரம்பித்தாலும் வலுவாக விவாதத்தை நிறைவு செய்ததாக,” பைடனுக்கு ஆதரவாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், டொனால்ட் டிரம்ப், பைடனை பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்து தாக்கிக்கொண்டே இருந்தார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 5 அன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக்கொள்வது அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வு. அதன்படி, ஜூன் 27, வியாழக்கிழமை அன்று ஜார்ஜியாவில் உள்ள அட்லான்டாவில் முதல் விவாதம் நடைபெற்றது.
ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையே 90 நிமிடங்கள் இந்த விவாதம் நீடித்தது. 2020 அதிபர் தேர்தலுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இரு தலைவர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.