காந்தியை ‘தேசத்தந்தை’ என்று முதலில் அழைத்தது யார்? இப்போது ஏன் சர்ச்சை?
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி, பாபுஜி, தேசத்தந்தை ஆகிய பெயர்களால் காந்தி அறியப்படுகிறார்.
ஜின்னா, சாவர்க்கர், அம்பேத்கர் போன்ற சில தலைவர்களே அவரது முழு பெயரை பயன்படுத்தியுள்ளனர். சில முக்கிய இந்திய தலைவர்கள் மிஸ்டர் காந்தி என்று அவரை அழைக்கின்றனர்.
ஜவஹர்ஹலால் நேரு மற்றும் வல்லபாய் படேலின் கடிதங்களில் ‘அன்புள்ள பாபுஜி’ என்ற வார்த்தை காந்தியைக் குறிப்பிட அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காந்தியின் மகன் மற்றும் குஜராத்தி பின்னணி கொண்ட சிலர் அவரை பாபுஜி என அழைக்கின்றனர். இதற்கு குஜராத்தி மொழியில் தந்தை என்று பொருள். எனவே இளம் காங்கிரஸ் தலைவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்த தொடங்கினர்.
சம்பாரண் சத்தியாகிரக இயக்கத்திற்குப் பிறகு காந்திக்கு ‘மகாத்மா’ என்ற புதிய பெயர் கிடைத்தது. இந்தப் பெயரை ரவீந்திரநாத் தாகூர் வழங்கியதாக கூறப்பட்டாலும் யார், எப்போது வழங்கினர் என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆனால், தன்னுடைய நல்லொழுக்கம் நிறைந்த வாழ்க்கை, எளிமையான உடை மூலம் நாட்டு மக்களை காந்தி கவர்ந்தார். மக்களிடையே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியதால், ‘மகாத்மா’ என்பது அவரது பொதுவான பெயராக பின்னர் மாறியது.
எதிர்ப்பாளர்கள் பலரும்கூட அவரை மகாத்மாஜி என்று தன்னுடைய உரையிலும் கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளனர். நாதுராம் கோட்சே கூடபிரபலமான தன்னுடைய நீதிமன்ற உரையில் காந்தியை ‘ஜி’ என்று மரியாதையுடனே குறிப்பிட்டார்.
இது நிகழ்ந்து இரண்டறை ஆண்டுகளுக்குப் பிறகு காந்திக்கான நேதாஜியின் ஒரு செய்தியில் தேசத்தின் தந்தை என்று சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக தன்னுடைய செய்தியில் மகாத்மாஜி என்று மட்டுமே நேதாஜி குறிப்பிட்டு வந்தார்.
ஜப்பானில் இருந்து ஆசாத் ஹிந்த் வானொலி ஒலிபரப்பிய இந்தச் செய்தி, நேதாஜியின் கடிதங்கள் மற்றும் செய்திகளை வைத்து சுகதா போஸ் மற்றும் சிசிர் குமார் போஸ் ஆகியோரால் தொகுக்கப்பட்ட ‘Blood Bath’என்ற புத்தகத்தின் 24 முதல் 34ஆம் பக்கங்களிலும், Delhi Chalo என்ற புத்தகத்தின் 212 முதல் 222ஆம் பக்கங்களிலும், ‘Essential Writings of Netaji Subhash Chandra Bose’ என்ற புத்தகத்தின் 300 முதல் 309ஆம் பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளது.
தன்னுடைய பேச்சின் தொடக்கத்தில் வழக்கம் போல மகாத்மாஜி என்றே நேதாஜி குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவரது கொள்கைகளை விவாதிக்கும் போது, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழியை பரிந்துரைத்து, ஜப்பான் உதவியை நியாயப்படுத்துகிறார்.
பின்னர் தன் உரையின் கடைசி வரியில், தேசத்தின் தந்தையே (ராஷ்டிரா பிதா) இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் உங்களின் ஆசிர்வாதத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என நேதாஜி குறிப்பிடுகிறார்.
காந்தியை தேசத்தந்தை என்று ஒருவர் குறிப்பிடுவது இதுவே முதல்முறை. இந்த அடைமொழி உடனடியாக பிரபலம் அடையாவிட்டாலும், காந்தியைக் குறிப்பிட படிப்படியாக பயன்படுத்தப்பட்டது.
