ஜி-7 உறுப்பினராக இல்லாத போதும், இந்தியா தொடர்ந்து மாநாட்டுக்கு அழைக்கப்படுவது ஏன்?

ஜி-7 உச்சி மாநாடு இத்தாலி நாட்டில் புகலியாவில் ஜூன் 13-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

உலகம் நெருக்கடியான சூழலில் இருக்கும் இந்நிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. காஸாவிலும் யுக்ரேனிலும் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பல ஜி-7 நாடுகள் உள்நாட்டு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சிஸ் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோதி, இத்தாலி சென்றுள்ளார். பிரதமராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கவிருந்த ஜி-7 உச்சி மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.
2023-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாடு நடைபெற்ற போது இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோதி அந்த மாநாட்டில் பங்கேற்றார். 2019-ஆம் ஆண்டிலும் இந்தியா ஜி-7 மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டும் இந்தியா உட்பட ஜி-7 நாடுகளில் அங்கம் வகிக்காத பல நாடுகள் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளன.