மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்: இஸ்ரோ என்ன செய்யப் போகிறது?

ககன்யான் திட்டத்திற்கான முன்னோட்ட சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் வரும் சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகின்றனர்.

ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் மனிதர்களை அனுப்புவதற்கான குப்பியின் பாதுகாப்பு செயல்பாட்டை பரிசோதனை செய்கின்றனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது. ககன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வானம் என்று பொருள். வானத்தை நோக்கிச் செல்லும் வாகனம் என்ற பொருளில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், மூன்று இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படுவார்கள்.

ராக்கெட் ஏவும் வாகனம் மார்க் -3 (LVM-3) மூலம் செலுத்தப்படும் இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள். இதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டம் விண்வெளி ஆய்வில் உள்நாட்டு நிபுணத்துவம், இந்திய தொழில்துறையின் அனுபவம், இந்திய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவுசார் திறன்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்பில் இருந்து கிடைக்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்களைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்ட உத்தியின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
சவாலான பணி. அதற்கான பல கட்ட தயாரிப்புகள் தேவைப்படுகின்றன.

மனிதர்களை அனுப்புவதற்கான குப்பியை எதிர்பாராத சவால்களில் இருந்து பாதுகாப்பதுதான் இப்போதைய ஆய்வின் நோக்கம். இந்தக் குப்பியில் 3 வீரர்கள் அமரலாம்.

ஏவுகணையை விண்ணுக்கு அனுப்பும்போது எதிர்பாராத விபத்துகள் நேரலாம். அவ்வாறான சூழலில் குப்பியை மட்டும் தனியாகப் பிரித்து பாதுகாப்பான விதத்தில் கடற்பரப்பில் விழச் செய்வதுதான் இப்போது நடக்கும் ஆய்வின் இலக்கு.